அரசியல்
அலசல்
Published:Updated:

பின்தொடர்ந்த கார்... ஹவாலா பணம் பறிப்பு... போலீஸ்காரர் பிடிபட்ட கதை!

புதுப்பேட்டை ராஜரத்தினம் ஸ்டேடியம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதுப்பேட்டை ராஜரத்தினம் ஸ்டேடியம்

உன்னை விசாரிக்க வேண்டும் வா...” என, அவரை புதுப்பேட்டை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குவைத்து, அழகுராஜாவை மிரட்டி, 30 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அந்தக் காவலர்.

ஹவாலா பிசினஸில் ஈடுபடுபவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் சென்னையில் தொடர்கதையாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம், ரயிலில் வந்த ஹவாலா ஏஜென்ட்டை மிரட்டி இரண்டு கோடி ரூபாய் பணம் பறித்த குற்றச்சாட்டில் நான்கு போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மீண்டும் அதே போன்றதொரு சம்பவம் சென்னையில் நிகழ்ந்திருக்கிறது.

ஹவாலா ஏஜென்ட்டை மிரட்டி, 30 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில், சென்னை ஆயுதப்படை காவலரும் அவரின் கூட்டாளிகளும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். வேலியே பயிரை மேய்ந்த கதையாக, காவலரே டீம் போட்டு கொள்ளையடித்த சம்பவம் குறித்து விசாரித்தோம்.

செந்தில்குமார்
செந்தில்குமார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா. இவரும் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் பாலகிருஷ்ணன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள். பாலகிருஷ்ணன் சிங்கப்பூரிலிருந்தபடியே ஹவாலா பிசினஸில் ஈடுபட்டிருக்கிறார். அவர் அனுப்பும் பணம், சென்னை பாரிமுனையிலுள்ள ஒரு ஹவாலா கும்பலுக்கு வந்தவுடன், அந்தப் பணத்தைப் பெற்று உரியவர்களிடம் சேர்க்கவேண்டிய பொறுப்பை அழகுராஜா ஏற்றிருக்கிறார். இதற்காக, மாதச் சம்பளமாக 20,000 ரூபாய் அழகுராஜாவுக்கு பாலகிருஷ்ணனால் அளிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே 13-ம் தேதி, சென்னை சைனா பஜாரைச் சேர்ந்த நவாஸ் என்பவருக்கு ஹவாலா மூலமாக 30 லட்சம் ரூபாயை அனுப்பியிருக்கிறார் பாலகிருஷ்ணன். வழக்கம்போல, அந்தப் பணத்தை ஏஜென்ட்டுகளிடம் பெற்றுக்கொண்ட அழகுராஜா, பணத்துடன் பைக்கில் சென்றபோதுதான் பிரச்னை வந்திருக்கிறது. அழகுராஜாவை வழிமறித்த ஆயுதப்படைக் காவலர் ஒருவர், “உன்னை விசாரிக்க வேண்டும் வா...” என, அவரை புதுப்பேட்டை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குவைத்து, அழகுராஜாவை மிரட்டி, 30 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார் அந்தக் காவலர். இது குறித்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் அழகுராஜா புகாரளிக்கவும், பணத்தை மிரட்டிப் பறித்த காவலர் செந்தில்குமார் உட்பட மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை.

புதுப்பேட்டை ராஜரத்தினம் ஸ்டேடியம்
புதுப்பேட்டை ராஜரத்தினம் ஸ்டேடியம்

இந்தச் சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “ஹவாலா பிசினஸில் ஈடுபடுபவர்களுடன் ஆயுதப்படை காவலர் செந்தில்குமாருக்கு ஏற்கெனவே தொடர்பு இருந்திருக்கிறது. ஹவாலா புள்ளிகளிடமிருந்து லட்சக்கணக்கில் அழகுராஜா பணத்தைப் பெற்றுக்கொள்வதை தெரிந்துகொண்ட செந்தில்குமார், அந்தப் பணத்தை கொள்ளையடிக்க தன் நண்பர்கள் கண்ணன், ராஜ்குமாருடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.

சம்பவத்தன்று அழகுராஜாவை செந்தில்குமார் டீம் காரில் ஃபாலோ செய்திருக்கிறது. சென்னை மன்றோ சிலை அருகே அழகுராஜா பைக்கில் வந்தபோது, அவரை வழிமறித்துச் சோதனையிட்ட செந்தில்குமார், பணத்துக்கான ஆவணத்தைக் கேட்டிருக்கிறார். ஹவாலா பணத்துக்கு ஆவணம் எங்கேயிருந்து வரும்... காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அழகுராஜாவை அழைத்து வந்த செந்தில்குமார், அங்கு ‘பரேடு’ பயிற்சியில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான காவலர்களைக் காட்டி, ‘நீ போலீஸ்ல சிக்கினா உன் வாழ்க்கையே முடிஞ்சுரும்’ என மிரட்டியிருக்கிறார். அழகுராஜா திக்கித் திணறவும், ‘நீ சரிப்பட்டு வரமாட்ட... ஆவணத்தைக் கொடுத்துட்டு பணத்தை வாங்கிட்டுப் போ’ என பணத்துடன் கிளம்பிவிட்டார் செந்தில்குமார்.

ராஜ்குமார், கண்ணன்
ராஜ்குமார், கண்ணன்

இந்த வழக்கை நாங்கள் விசாரித்த போது, பணத்தைக் கொள்ளையடித்தவர் காவலர் சீருடை அணிந்தவர் என்பது மட்டும்தான் எங்களுக்கும் அழகுராஜாவுக்கும் தெரிந்திருந்தது. இதனால், ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு அழகுராஜாவை அழைத்துச் சென்று, அங்கிருந்த காவலர்களில் குற்றவாளி இருக்கிறாரா என்பதை அடையாளம் காட்டச் சொன்னோம். சிசிடிவி கேமராவிலும் துழாவினோம். ஆனால், அழகுராஜாவால் அடையாளம் காட்ட முடியவில்லை. அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர், செந்தில்குமாருடன் அழகுராஜாவைப் பார்த்ததாக எங்களுக்குத் தகவல் அளிக்கவும்தான், கொள்ளையடித்தது செந்தில்குமார் என்பதே எங்களுக்குத் தெரிந்தது. செந்தில்குமாரையும் அவருக்கு உதவிய இருவரையும் கைது செய்திருக்கிறோம். இதேபோல வேறு யாரிடமும் ஹவாலா பணத்தைப் பறித்திருக்கிறார்களா என்பதை விசாரித்துவருகிறோம்” என்றனர்.

இந்தக் கொள்ளைக்காக, காவலர் செந்தில்குமார் டீம் பயன்படுத்திய இரண்டு கார்களை பறிமுதல் செய்திருக்கிறது போலீஸ். அவர்களிடமிருந்த 21,12,500 ரூபாய் பணம், 53 கிராம் தங்க நகைகளைக் கைப்பற்றியிருக்கிறார்கள். “கொள்ளை நடந்திருக்கும்விதத்தைப் பார்த்தால், இது செந்தில்குமாரின் முதல் சம்பவமாக இருக்க வாய்ப்பில்லை” என்கிறார்கள் காக்கி உயரதிகாரிகள். முறைப்படி விசாரித்தால், இந்த விவகாரத்தில் பல பூதங்கள் கிளம்பலாம்!