கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் தருகிறேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 பேரிடம் மொத்தம் ரூ.18 கோடி வரை மோசடி செய்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இது போன்ற கிரிப்டோகரன்சி முதலீடு, அதிக லாபம் என்ற பெயரில் நடக்கும் பணமோசடி செய்திகள் தொடர்ந்து வெளிவந்தாலும்... ஏமாற்று பேர்வழிகளும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டுதான் உள்ளனர். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யும் முன்பாக அதிலுள்ள ஆபத்துகளைப் பற்றி இவர்கள் அறிவதில்லை.
இந்நிலையில், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இந்த மோசடி குறித்து தனித்தனியாகப் புகார் மனுக்களைக் கொடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில், ``பெரம்பலூர் அருகே நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்டான்லி சைமன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர் பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கிரிப்டோகரன்சி முதலீட்டை அறிமுகம் செய்தார். ஒரு காயினில் முதலீடு செய்தால் 10% முதல் 20% வரை அதிக லாபம் உங்களுக்குக் கிடைக்கும் என்றார். மேலும், இதில் முதலீடு செய்யும் பணத்துக்கு நானே பொறுப்பு என்று கூறி எங்களை மூளைச்சலவை செய்தார். அவர் சொன்னதை நம்பி நாங்களும் எங்கள் பணத்தையெல்லாம் அதில் முதலீடு செய்தோம். ஆனால், எங்களுக்கு அந்தப் பணத்துக்கு லாபமும் கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.

அவரிடம் தொடர்ந்து கேட்டால் எங்களுக்கு கொலை மிரட்டல்தான் வருகிறது. எங்களிடம் பெறப்பட்ட பணமானது அவரின் மனைவியிடமும் மகளிடமும் கொடுத்து வைத்துள்ளார். பணப்பரிவர்த்தனை அவரின் மனைவியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே, அவரின் மனைவி, மகளை இந்த வழக்கில் சேர்த்தால்தான் எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். காவல்துறை அவர்களிடம் விசாரணை செய்து எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.