
அனீஷ்குமாரிக்கும், பிளம்பர் சபாபதிக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்திருக்கிறது. 3.3.2023-ம் தேதியன்று மகனின் திருமணத்துக்காக சபாபதி குடும்பத்தினர் ஷாப்பிங் சென்றிருக்கிறார்கள்.
சிசிடிவி-யில் சிக்கிக்கொள்வோம் எனத் தெரியாமல், “நான் பிரபலமான யூடியூபர், என் வீடியோ மூலமாகக் கைநிறைய சம்பாதிக்கிறேன். அப்படியிருக்கும்போது நான் ஏன் நகை, பணத்தைத் திருட வேண்டும்” என்று எகிறிய யூடியூபர் அனீஷ்குமாரியை ஆதாரத்தோடு அள்ளிச் சென்றிருக்கிறது சென்னை போலீஸ்.
சென்னை, பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்தவர் சபாபதி. இவரின் மனைவி மாலதி. 7.3.2023 தேதியன்று பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதற்காக, மாலதி தன் வீட்டு பீரோவைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்த மூன்று சவரன் தங்க நகைகள், 50,000 ரூபாய் பணம் ஆகியவை காணாமல்போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். தன் கணவர் சபாபதியிடம் போனில் தகவல் தெரிவித்திருக்கிறார். அவரும், ''நகை, பணத்தை யார் எடுத்தார்கள்?'' என்று சந்தேகமாக மனைவியிடமே கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையடுத்து, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில், நகை, பணம் திருட்டுப்போனது தொடர்பாக மாலதி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், வழக்கு பதிவுசெய்து, மாலதியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் நகை, பணம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அதில், மாடர்ன் டிரெஸ் அணிந்த இளம்பெண் ஒருவர் நம்பர் பிளேட் இல்லாத பைக் ஒன்றில் சபாபதியின் வீட்டுக்கு வந்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்மீது சந்தேகமடைந்த போலீஸார், நம்பரில்லாத அந்த பைக் பயணித்த சாலைகளிலிருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை வைத்து, அந்த இளம்பெண் யார் என்பதைக் கண்டுபிடித்தனர்.
மண்ணிவாக்கம் பகுதியில் வசிக்கும் பிரபல யூடியூபரான அனீஷ்குமாரிதான் அந்த இளம்பெண். போலீஸார் அவரிடம் சபாபதி வீட்டில் நடந்த திருட்டு குறித்து விசாரித்தபோது, “நான் பிரபலமான யூடியூபர். கைநிறைய சம்பாதிக்கிறேன். அப்படியிருக்கும்போது நான் ஏன் இன்னொருவர் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருட வேண்டும்?'' என போலீஸாரிடம் எகிறியிருக்கிறார். இதையடுத்து, சிசிடிவி ஆதாரங்களை போலீஸார் அனீஷ்குமாரியிடம் காண்பித்ததும் அவரின் முகம் வியர்த்துக் கொட்டியிருக்கிறது. போலீஸாரின் கிடுக்குப்பிடி விசாரணைக்குப் பிறகு, திருடியதை ஒப்புக்கொண்ட அனீஷ்குமாரி, தன் வீட்டின் ஃப்ரிட்ஜுக்குள் ஒளித்துவைத்திருந்த திருடிய நகைகளை போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீஸார் கூறுகையில், “அனீஷ்குமாரிக்கும், பிளம்பர் சபாபதிக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்திருக்கிறது. 3.3.2023-ம் தேதியன்று மகனின் திருமணத்துக்காக சபாபதி குடும்பத்தினர் ஷாப்பிங் சென்றிருக்கிறார்கள். இதை சபாபதி மூலமாகவே தெரிந்துகொண்ட அனீஷ்குமாரி, திட்டமிட்டு பணம், நகைகளைத் திருடியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், சபாபதியின் மனைவி மாலதிக்கு வீட்டுச் சாவியை வாஷிங் மெஷின் அருகே மறைத்து வைக்கும் பழக்கமிருந்திருக்கிறது. அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டவர், சிசிடிவி காட்சிப் பதிவுகளை கவனிக்கத் தவறிவிட்டார். அனீஷ்குமாரி ஏற்கெனவே பைக் திருட்டு வழக்கில் சிறைக்குச் சென்றவர். தற்போது மீண்டும் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். சபாபதியிடம் அனீஷ்குமாரி குறித்து மேற்கொண்டு விசாரித்துவருகிறோம்" என்றனர்.