அலசல்
சமூகம்
Published:Updated:

‘ஏரித் தண்ணீரிலும் சாராய வாடை...’ - சாத்கர் மலை சாம்ராஜ்ஜியம்... கட்டுப்படுத்த திணறுகிறதா போலீஸ்?

சாத்கர் மலை
பிரீமியம் ஸ்டோரி
News
சாத்கர் மலை

போலீஸ் படை மலைப் பகுதியின் எந்த மூலையிலிருந்து ஏறினாலும், உடனே சாராயக் கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்து ‘விசில்’ சத்தம் பறக்கும்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மலையையே கட்டுக்குள்வைத்து சாராய ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கிறது பெரும் மாஃபியா கூட்டம். இவர்களைக் கூண்டோடு கைதுசெய்ய முடியாமல் காவல்துறையும் திணறிக்கொண்டிருக்கிறது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகிலிருந்து ஆந்திர மாநில எல்லை வரை 900 ஹெக்டேருக்கு பரந்து விரிந்திருக்கிறது ‘ஜான்ரஸ்’ என்ற ‘சாத்கர்’ மலை. இந்த மலைக்குள் ஆங்காங்கே வற்றாத நீரோடைகளும், சாராயம் காய்ச்சுவதற்குத் தேவையான மூலப்பொருள்களுள் ஒன்றான குறிப்பிட்ட மரப்பட்டைகளும் அபரிமிதமாகக் காணப்படுகின்றன. இதனால், சட்டவிரோத மாஃபியா கும்பல்கள் சாத்கர் மலைப் பகுதியை ஆக்கிரமித்து, சாராய அடுப்புகளைப் பற்றவைத்திருக்கின்றன. சாத்கர் மலையில், திரும்பிய பக்கமெல்லாம் புகையும் அடுப்புகளும், ஊறல் வடிக்கும் பேரல்களும்தான் காணப்படுகின்றன. வெளியாட்கள் யாரும் அவ்வளவு எளிதாக ஊடுருவவோ, கண்காணிக்கவோ முடியாத அளவுக்கு இந்த மலைப் பகுதியை தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது சாராய மாஃபியா கும்பல்.

சாத்கர் மலை
சாத்கர் மலை

“போலீஸ் படை மலைப் பகுதியின் எந்த மூலையிலிருந்து ஏறினாலும், உடனே சாராயக் கும்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்து ‘விசில்’ சத்தம் பறக்கும். சத்தம் வரும் திசையை போலீஸார் அண்ணாந்து பார்க்கும் அடுத்த விநாடி மொத்தக் கும்பலும் தப்பிவிடுகிறது. ஒவ்வொரு முறையும் ரெய்டுக்குச் செல்லும் போலீஸார், பல்லாயிரம் லிட்டர் சாராய பேரல்களை அடித்து நொறுக்கிவிட்டு வருகிறார்கள். ஆனாலும், சாராய மாஃபியாவிடமிருந்து சாத்கர் மலையை மீட்க முடியவில்லை. கடந்த ஆண்டு, ஜூலை மாதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடியாகச் சாராயத் தடுப்பு வேட்டைக்குப் புறப்பட்டார். மலை ஏறிய ஆட்சியருக்கு எச்சரிக்கை விடுக்கும்விதமாக சாராயக் கும்பல்கள் பாறாங்கற்களைத் தள்ளிவிட்டுத் தப்பின. ஆட்சியருக்கே இந்த நிலைதான்” என்று போலீஸாரே சொல்கிறார்கள்.

சாத்கர் மலை, சாராய மாஃபியாக்களின் தனி ராஜ்ஜியத்தில் சிக்குண்டு கிடக்கிறது என்ற தகவலால் அங்கு விரைந்தது நம் ஜூ.வி டீம். மலையின் அடிவாரத்திலேயே வெல்ல மூட்டைகளுடன் நம்மை நோட்டமிட்ட சாராயக் கும்பலைச் சேர்ந்த இரண்டு பேர், நம் புகைப்படக்காரரின் கையில் இருந்த கேமராவைப் பார்த்ததும் பைக்கில் ஏறி, வேகமாகத் தப்பித்துச் சென்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், ‘‘சாத்கர் மலையிலிருந்து வரும் நீரோடை, அடிவாரத்திலுள்ள ஜாப்ராபாத் ஏரியில் கலக்கிறது. நீரோடைக்கு அருகிலேயே பெருமளவில் சாராயம் காய்ச்சப்படுகிறது. மலையைச் சுற்றியிருக்கும் நான்கைந்து கிராமங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட கும்பல்தான் தலைமுறை தலைமுறையாக இந்த சாராயத் தொழிலைச் செய்துவருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘கரடி சேட்டு’ என்ற சாராய கும்பலின் தலைவன் கைதுசெய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். அப்போது அவன் சிறையிலேயே உடல்நலக் குறைவால் இறந்துபோக, ஆத்திரமடைந்த அவரின் ஆதரவாளர்கள், உள்ளூர் காவல் நிலையத்தையே சூறையாடிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. அந்த அளவுக்குக் கொடூரமான மூடர் கூட்டமாக முந்தைய தலைமுறை சாராய மாஃபியாக்கள் இருந்திருக்கிறார்கள்.

சாத்கர் மலை
சாத்கர் மலை

இந்தத் தலைமுறை திருந்தி வாழ, அவர்களின் மறுவாழ்வுக்காக மாநில அரசு பலமுறை உதவி செய்தது. ஆனால், அவர்கள் திருந்தியபாடில்லை. 25 ரூபாய்க்கு சாராயப் பொட்டலங்கள் கிடைப்பதால், டாஸ்மாக் கடையைவிட இந்த மலைச் சாராயத்தைக் குடிக்கத்தான் கூட்டம் படையெடுத்து வருகிறது. இந்தக் குடிநோயால் கணவனை இழந்து, கைக்குழந்தைகளுடன் தவித்துக்கொண்டிருக்கிறார்கள் பல இளம் பெண்கள். இந்தச் சாராயத்தால் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ராஜேஸ்கண்ணன்
ராஜேஸ்கண்ணன்

ரெய்டின்போது அதிகாரிகள் ஊறல் பானைகளை உடைத்து, அவற்றிலிருக்கும் சாராயத்தை நீரோடையிலேயே கவிழ்த்துவிடுகிறார்கள். இதனால், ஏரித் தண்ணீரிலும் சாராய வாடைதான் வீசுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பேரணாம்பட்டு வனச்சரத்துக்கு உட்பட்ட மோர்தானா காப்புக் காட்டுக்குள் சுற்றித்திரிந்த காட்டுயானை ஒன்று சாத்கர் மலைப் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. அங்கிருந்த சாராய ஊறல்களைத் தண்ணீர் எனக் குடித்துவிட்டு போதையில் தடுமாறி, பயங்கரமாகப் பிளிறியது. சமீபத்தில் மலைப் பகுதியில் சிறுத்தைக்குட்டி ஒன்றும் மர்மமான முறையில் இறந்துகிடந்தது. சிறுத்தையை, சாராயக் கும்பல்கள் வேட்டையாடியிருக்கலாம் என்ற சந்தேகமும் வனத்துறைக்கு எழுந்தது. உள்ளூர் போலீஸாரை இந்தச் சாராயக் கும்பல்கள் ‘வெயிட்டாக’ கவனித்துவிடுவதால், ‘யாராலும் தங்களை அசைக்க முடியாது’ எனத் திமிரில் ஆட்டம்போடுகிறார்கள். எனவே, பொதுமக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் காலம் காலமாகத் தீங்கு விளைவிக்கும் இந்தச் சாராய மாஃபியாவை ஒழிக்க, தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக, வேலூர் மாவட்ட எஸ்.பி ராஜேஸ்கண்ணனிடம் பேசினோம். “சாத்கர் மலையைக் காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான வேலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம். சாராயம் காய்ச்சுகிறவர்கள், விற்பவர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் என சாத்கர் மலை சாராயக் கும்பல்களுக்காகத் தனியாக ‘குற்றப் பதிவேடு’ தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலில், மாஃபியா கும்பலின் தலைமை நபர்களை ஒடுக்கி, அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவிருக்கிறோம். அதோடு, திருந்தி வாழ முன்வரும் நபர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும், மலைப் பகுதிகளைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் விழிப்புணர்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது’’ என்றார்.

வார்த்தைகள், செயல்பாட்டுக்கு வருமா..? பார்ப்போம்!