அலசல்
Published:Updated:

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிமங்கள்... அமைச்சர் பேசிய பிறகுதான் அதிக லாரிகள் போகின்றன!

கடத்தப்படும் கனிமங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கடத்தப்படும் கனிமங்கள்

- கொந்தளிக்கும் சமூக ஆர்வலர்கள்!

“கேரளாவிலிருந்து ஒரு கைப்பிடி ஆற்று மணலைக்கூட நாம் அள்ளிக்கொண்டு வர முடியாது. ஆனால், நமது மலைகளையெல்லாம் உடைத்து, தினமும் பல நூறு லாரிகளில் கேரளாவுக்குக் கடத்திச் செல்கிறார்கள்” எனக் கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

தென்காசி மாவட்டத்தில் செயல்படும் 33 கல்குவாரிகளிலிருந்து கிடைக்கும் பாறை, கல், ஜல்லி, எம்-சாண்ட் ஆகியவை புளியரை செக்போஸ்ட் வழியாகக் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதில், சட்டவிரோதமாகக் கனிமங்கள் கடத்திச் செல்லும் லாரிகளைப் பொதுமக்களே மறித்து காவல்துறை யினரிடம் ஒப்படைத்தாலும், நடவடிக்கை ஏதுமில்லை என்கின்றனர்.

இது குறித்து கனிம வளப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவி அருணன் கூறுகையில், “கல்குவாரி களால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. 40 அடி ஆழத்துக்கு விவசாயக் கிணறுகள் இருக்கும் இடங்களில், 200 அடிக்கும் மேலாகத் தோண்டி கனிமங்களை வெட்டி எடுப்பதால், விவசாயக் கிணறுகள் வறண்டுபோகின்றன. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களையும் குவாரி உரிமையாளர்களிடம் விற்றுவிட்டு வெளியிடங்களுக்குப் பஞ்சம் பிழைக்கச் செல்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

கேரளாவுக்குச் செல்லும் லாரிகளில் 50 டன், 60 டன் அளவுக்குக் கனிமங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. ஆனால், செக் போஸ்ட்டில் கொஞ்சம்கூட இது கண்டுகொள்ளப்படுவதில்லை. நாங்கள் போராட்டம் நடத்தினால், அடுத்த ஓரிரு தினங்களுக்குச் சோதனை என்ற பெயரில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு 2,000 ரூபாய் அல்லது 5,000 ரூபாய் என சொற்பத் தொகையை அபராதமாக விதித்து அனுப்பிவைக்கிறார்கள்.

தமிழகத்தின் கனிம வளங்கள் கேரளாவுக்குக் கடத்திச் செல்லப்படுவது தொடர்பாகச் சட்டமன்றத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், ‘கிராமத்துச் சாலைகளில் மிகப்பெரிய வாகனங்கள் செல்வதால் சாலைகள் பிதுங்கிவிடுகின்றன. அத்தகைய ராட்சத வாகனங்கள் செல்லக் கூடாது என்பதுதான் நாங்கள் போட்டிருக்கும் சட்டம். எங்களையும் மீறிப் போகுமானால், அங்கிருக்கும் போலீஸார் நடவடிக்கை எடுக்கலாம்’ என்று பேசினார். ஆனாலும் புளியரை செக்போஸ்ட்டில் வாகனங்களின் எண்ணிக்கை கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

அமைச்சர் அறிவித்த பிறகு, கனிம வளம் கேரளாவுக்குக் கடத்தப்படுவது தடுக்கப்படும் என நம்பியிருந்தோம். ஆனால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இதுவரை இந்த லாரிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சென்றன. அமைச்சர் பேசிய பிறகு, அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த லாரிகளை அனுமதிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு பாராமுகமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது” என்று வருத்தப்பட்டார்.

கடத்தப்படும் கனிமங்கள்
கடத்தப்படும் கனிமங்கள்

இயற்கை வளப் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளரான ஜமீன் நம்மிடம் பேசுகையில், ‘‘தினமும் 600 லாரிகளில் கேரளாவுக்குக் கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஏற்கெனவே ஆறுகளில் இருந்த மணல் முழுவதும் கேரளாவுக்குச் சென்றுவிட்டது. இப்போது மலைகளையும், மண்ணுக்குள் இருக்கும் பாறைகளையும் உடைத்து எடுத்து கேரளாவுக்குக் கொண்டுசெல்வதை அனுமதிப்பதால், பூகம்பம் உள்ளிட்ட இயற்கைச் சீற்றத்துக்கு தமிழகம் உள்ளாக நேரிடும்.

நம்மைவிடவும் அதிகமாக மலைகள் இருக்கும் கேரளாவில் அவற்றை வெட்ட அனுமதிப்பதில்லை. அங்கிருக்கும் ஆறுகளில் மணல் எடுக்க அனுமதிப்பதில்லை. அவர்களின் வளங்களையெல்லாம் பாதுகாக்கும் கேரள அரசாங்கம், தமிழகத்தின் வளங்களை மட்டும் சுரண்டுகிறது. பதிலுக்கு நமக்கு அங்கிருக்கும் மின்னணு, இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகளைக் கொடுத்தனுப்பி நமது நிலத்தையும் பாழ்படுத்துகிறார்கள்.

இது பற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ‘பிற மாநிலங்களுக்குப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருப்பதாக’ சொல்கிறார்கள். அப்படியானால், கேரளாவிலிருந்து தமிழகத்துக்குள் ஆற்று மணலை அள்ளிக்கொண்டு வந்துவிட முடியுமா?” என்று கொந்தளித்தார்.

ரவி அருணன், ஜமீன், துரை.ரவிச்சந்திரன்
ரவி அருணன், ஜமீன், துரை.ரவிச்சந்திரன்

இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியரான துரை.ரவிச்சந்திரனிடம் பேசினோம். “தென்காசி மாவட்டம், புளியரை செக்போஸ்ட் வழியாகச் செல்லும் வாகனங்கள் குறித்து நானே நேரில் சென்று ஆய்வுசெய்தேன். அவை அனைத்தும் முறையான அனுமதி பெற்றே செல்கின்றன. கனரக லாரிகளில் 49 டன் வரை ஏற்றிச் செல்ல அனுமதி இருந்தபோதிலும் 43 டன் வரையே ஏற்றிச் செல்லப்படுகின்றன. புளியரை வழியாகச் செல்லும் லாரிகள் அனைத்துமே தென்காசி மாவட்டத்தின் கனிமங்களைக் கொண்டு செல்லவில்லை. நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டத்தின் தென் பகுதி ஆகியவற்றிலுள்ள குவாரிகளிலிருந்து லாரிகள் வருகின்றன. ஆனால், சிலர் அதைப் புரிந்துகொள்ளாமல், தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். அரசின் அனுமதியுடனேயே கனிமங்கள் கேரளாவுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காகவே அதிகாலை நான்கு மணி முதல் லாரிகளை அனுமதிக்கிறோம்” என்றார்.

கனிம வளங்கள் கேரளாவுக்குச் செல்வது பற்றி அரசுக்கோ, மாவட்ட நிர்வாகத்துக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை என்பது அவர்களின் பதிலிலிருந்தே தெரிகிறது!