சமூகம்
அலசல்
Published:Updated:

‘நாகமுத்து’ என்று சொல்லி லட்சக்கணக்கில் ஏமாற்றிவிட்டார்!

பூசாரி சுரேஷ்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
பூசாரி சுரேஷ்குமார்

‘நாகலோக’ பூசாரிமீது பண மோசடிக் குற்றச்சாட்டு

நாகர்கோவிலை அடுத்த கள்ளியங்காடு பகுதியிலுள்ள பத்திரகாளி அம்மன் கோயில் பூசாரி சுரேஷ்குமார். இவர், பக்தர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது!

இரணியல் போலீஸில் புகார் கொடுத்திருக்கும் லாவண்யா, இது குறித்து நம்மிடம் பேசியபோது, ‘‘பூசாரி சுரேஷ்குமார், ‘நான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபீஸர். ‘நாகலோக’த்தைச் சேர்ந்தவன். ஆனால், என் உடலில் சாமி வரத் தொடங்கியதும் ஐ.ஏ.எஸ் பணியை விட்டுவிட்டு கோயிலுக்குப் பூசாரியாக வந்துவிட்டேன்’ என்றெல்லாம் என்னிடம் சொன்னார். குடும்பப் பிரச்னைகள் தீர கோயிலுக்குச் சென்ற நானும், பூசாரி சுரேஷ் சொல்வதையெல்லாம் நம்பினேன்.

நாகதேவி, நள்ளிரவில் மாணிக்கக் கற்களை வாந்தி எடுப்பதாகவும், அந்தக் கல் இதுதான் என்றும் சொல்லி வண்ணக் கற்களைப் பக்தர்களிடம் காண்பித்து ஏலம்விடுவார். ‘நாகம் கக்கிய பச்சை மரகதக்கல்’ என அவர் கூறியதை நம்பி நாங்களும் ஒரு கல் 50,000 ரூபாய் என்ற மதிப்பில் பல கற்களை ஏலத்தில் எடுத்தோம். அதுபோல பூஜைக்கு வைத்த ‘ஸ்படிக லிங்கம்’ என ஒரு லிங்கத்தையும் என்னிடம் கொடுத்து 75,000 ரூபாயை வாங்கிக்கொண்டார். இதற்கிடையே, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விலையுள்ள ரேடோ வாட்ச் ஒன்றையும் எங்களிடமிருந்து கேட்டு வாங்கிக்கொண்டார்.

மாணிக்கக் கற்கள்
மாணிக்கக் கற்கள்

ஒருநாள் என் குழந்தைக்கு, பூவுக்குள்ளிருந்து கறுப்பு நிற மாலை ஒன்றைத் திடீரென எடுத்துக் கொடுத்தார். ஆனால், அந்த மாலையை அவர் முன்பே தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்ததை நான் பார்த்துவிட்டேன். அப்போதிலிருந்துதான் அவர் நம்மை ஏமாற்றுகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஒருமுறை நகைகளை அடகுவைக்கப் போனபோது, பூசாரி சுரேஷ்குமார் கொடுத்த மரகதக் கற்களைச் சோதித்துப் பார்த்த நகை மதிப்பீட்டாளர், ‘இவை நூறு ரூபாய்க்குக் கிடைக்கும் சாதாரண வண்ணக்கல்’ என உண்மையைச் சொல்லிவிட்டார். இனி இவரிடம் யாரும் ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான் போலீஸில் புகாரளித்தோம்” என்றார்.

பூசாரி சுரேஷ்குமார்
பூசாரி சுரேஷ்குமார்

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்டு பூசாரி சுரேஷ்குமாரிடம் பேசினோம். “பாம்பு மாணிக்கக் கல்லைக் கக்கினால், நான் எதற்காக இந்தக் குளத்தின் கரையில் புறம்போக்கில் இருக்கப் போகிறேன்... சிலர் ராசிக்கு ஏற்ப கல் கொண்டுவந்து பூஜைக்குவைத்துவிட்டு, எடுத்துச்செல்வார்கள். பூஜைக்காக அவர்கள் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் காணிக்கை வைப்பார்கள். வரக்கூடிய பத்து ரூபாய் காணிக்கையில் ஐந்து ரூபாயைக் கோயிலுக்குச் செலவு செய்துவிட்டு, மீதமுள்ள ஐந்து ரூபாயை எனது செலவுக்கு எடுத்துக்கொள்கிறேன். ‘நான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி’ என்று சொன்னதாக அவர்கள்தான் பொய்யாகப் பேசிவருகிறார்கள். உண்மையில், அவர்கள்தான் எனக்குப் பணம் தரவேண்டியிருக்கிறது. அவர்களின் செயலால் என் குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறது” என்றார்.

இந்த விவகாரம் குறித்து குளச்சல் டி.எஸ்.பி தங்கராமனிடம் பேசினோம். “லாவண்யா கொடுத்த புகாரில், சுரேஷ்குமார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் லாவண்யா மீது குற்றம் சுமத்தியும், சுரேஷ்குமார் தரப்பிலிருந்து புகார் கொடுத்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம்” என்றார் சுருக்கமாக.

ஆன்மிகம் என்ற பெயரில் யார், எதைச் சொன்னாலும் நம்புவதா?