கட்டுரைகள்
Published:Updated:

‘ஹலோ ஐயாம் சையின்டிஸ்ட் நோரா!’- தமிழக பிசினஸ்மேன்களிடம் கோடிகளைச் சுருட்டிய நைஜீரிய கும்பல்

நைஜீரிய கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
News
நைஜீரிய கும்பல்

`ரத்தப் புற்றுநோய்க்கு கனடாவிலுள்ள மருந்துத் தயாரிப்பு கம்பெனிக்கு மூலப்பொருள்கள் வேண்டும். அவை டெல்லியில்தான் கிடைக்கும். நீங்கள் அதை வாங்கி எங்களுக்கு சப்ளை செய்ய முடியுமா?’

கொரோனா, கேன்சர் மருந்துகள் கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் எனக் கூறி, தமிழகத்தில் ஏராளமான பிசினஸ்மேன்களிடம் கோடிகளைச் சுருட்டிய நைஜீரிய மோசடிக் கும்பலை சைபர் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். ஹாலிவுட் படத்தை மிஞ்சும் வகையில் இவர்களின் மோசடித் திட்டங்கள் இருக்கின்றன என்கிறார்கள் சைபர் க்ரைம் போலீஸார்.

நோரா
நோரா

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் விஜய் என்பவரை, சில மாதங்களுக்கு முன்பு கனடாவிலிருந்து நோரா என்ற பெண் சோஷியல் மீடியா மூலமாகத் தொடர்புகொண்டிருக்கிறார். அவர்,

`` `MONOTROPA UNIFLORA’ என்ற ஆயுர்வேத மூலப்பொருள் எங்களின் மருந்துத் தயாரிப்பு கம்பெனிக்குத் தேவைப்படுகிறது. அதை வாங்கி, எங்களுக்கு சப்ளை செய்தால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்” என விஜய்யிடம் தெரிவித்திருக்கிறார். கூடவே மூலப்பொருள் சப்ளையர்கள், அவர்களுடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் பகிர்ந்திருக்கிறார். அனைத்தையும் அப்படியே உண்மையென நம்பிய விஜய், அந்த வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 33 லட்சம் ரூபாயை ஆயுர்வேத மூலப்பொருள்களை வாங்க அனுப்பியிருக்கிறார். ஆனால், பணம் கையில் சிக்கியதுமே, செல்போன் நம்பரை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார் நோரா.

‘ஹலோ ஐயாம் சையின்டிஸ்ட் நோரா!’- தமிழக பிசினஸ்மேன்களிடம் கோடிகளைச் சுருட்டிய நைஜீரிய கும்பல்

ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்துகொண்ட விஜய், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் புகாரளித்தார்.அந்தப் புகாரின் பேரில், உடனடியாக அந்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. அதன் மூலமாக, நைஜீரியாவைச் சேர்ந்த ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா, உச்சே ஜான் இமேகா, காட்வின் இமானுவேல், எபோசிஉச்சென்னா ஸ்டான்லி ஆகியோர் கைதாகியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து செல்போன்கள், லேப்டாப்கள், ஏடிஎம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

நைஜீரிய கும்பல்
நைஜீரிய கும்பல்

இது குறித்து நம்மிடம் பேசிய மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார், ``படிப்பு மற்றும் வேலை உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி இந்தியாவுக்குள் நுழைந்த நைஜீரியாவைச் சேர்ந்த இது போன்ற மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள், ஆன்லைன் பிசினஸில் ஆக்டிவ்வாக இருப்பவர்களின் விவரங்களை Linkedin உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகச் சேகரிக்கிறார்கள். பின்னர், பிசினஸ்மேன்களிடம், தங்களை சயின்டிஸ்ட் அல்லது டாக்டர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பண மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த மோசடிக் கும்பலின் டார்கெட் தமிழக பிசினஸ்மேன்கள்தான். புகாரளித்த தொழிலதிபர் விஜய்யிடம், `ரத்தப் புற்றுநோய்க்கு கனடாவிலுள்ள மருந்துத் தயாரிப்பு கம்பெனிக்கு மூலப்பொருள்கள் வேண்டும். அவை டெல்லியில்தான் கிடைக்கும். நீங்கள் அதை வாங்கி எங்களுக்கு சப்ளை செய்ய முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதை அவர் நம்ப வேண்டும் என்பதற்காக டாக்டர், சயின்டிஸ்ட் என்றெல்லாம் தங்களைக் காட்டிக்கொண்டு, ஹாலிவுட் பட பாணியில் நடித்து, மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதுபோல தமிழகம் முழுவதும் ஏராளமான பிசினஸ்மேன்களிடம் பல கோடி ரூபாயைச் சுருட்டியிருக்கிறது இந்தக் கும்பல்” என்றனர்.

சைபர் மோசடியிலிருந்து தப்பிக்க, விழிப்புணர்வு மட்டுமே ஒரே ஒரு வழி!