அலசல்
அரசியல்
Published:Updated:

கூகுள் பே-யில் லஞ்சம்... கைதான காவலர்கள்!

மணிபாரதி, அமிர்தராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
மணிபாரதி, அமிர்தராஜ்

ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்த இவர்கள் படப்பை, ஆரம்பாக்கம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே சாலையில் வருவோர் போவோரை மிரட்டி, தொடர்ந்து பண வசூலில் ஈடுபட்டுவருவதாக ஏற்கெனவே சில புகார்கள் எழுந்தன.

காதலர்களை மிரட்டி, கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதற்காக போலீஸார் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காதல் ஜோடிகள், குடிமகன்களை மிரட்டி நீண்டகாலமாக இதுபோல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவந்த காவலர்கள் கைதுசெய்யப்பட்ட பின்னணி குறித்து விசாரித்தோம்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகிலுள்ள ஆரம்பாக்கம் பகுதியில், நீல நிற ஸ்விஃப்ட் கார் ஒன்று சாலையோரமாக நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக பைக்கில் ரோந்து சென்ற காவலர்கள் இருவர், காருக்குள்ளிருந்த ஜோடியை விசாரித்திருக்கிறார்கள்.

‘நாங்கள் இருவரும் காதலர்கள், எங்களுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது’ என்று அவர்கள் பதிலளித்தபோதும் அதை நம்பாத ரோந்து போலீஸார், அவர்களை வீடியோ எடுத்து, `பெற்றோருக்கு அனுப்புவோம்’ என மிரட்டியிருக்கிறார்கள். அதனால் அச்சமடைந்த காதல் ஜோடியிடம், ‘பணம் கொடுத்தால் விட்டுவிடுகிறோம்’ எனப் பேரம் பேசி, கூகுள் பே மூலமாக 4,000 ரூபாயைக் கறந்துவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்கள்.

மணிபாரதி, அமிர்தராஜ்
மணிபாரதி, அமிர்தராஜ்

இந்த நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர், `ஆரம்பாக்கம் பகுதியில் காவலர்கள் இரண்டு பேர் காதல் ஜோடிகளை மிரட்டிப் பணம் வசூலிப்பதாக’ புகார் தெரிவித்துவிட்டு, போன் இணைப்பைத் துண்டித்திருக்கிறார். அது குறித்து விசாரிக்க, தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டதன் பேரிலேயே காவலர்கள் மணிபாரதி, அமிர்தராஜ் இருவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் குறித்து மணிமங்கலம் போலீஸாரிடம் பேசினோம். ``மணிபாரதி, கடந்த 2013-ம் ஆண்டும், அமிர்தராஜ் கடந்த 2016-லும் காவலர்களாகப் பணிக்குச் சேர்ந்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்புதான் இவர்கள் இருவரும் மணிமங்கலம் காவல் நிலையத்துக்குப் பணி மாறுதலாகி வந்தனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்த இவர்கள் படப்பை, ஆரம்பாக்கம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே சாலையில் வருவோர் போவோரை மிரட்டி, தொடர்ந்து பண வசூலில் ஈடுபட்டுவருவதாக ஏற்கெனவே சில புகார்கள் எழுந்தன. கடந்த 11-ம் தேதி இரவு, தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஆரம்பாக்கம் அருகே காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கிருஷ்ணன் என்ற இளைஞரிடம், காவலர்கள் மணிபாரதி, அமிர்தராஜ் இருவரும் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். இன்ஜினீயர் கிருஷ்ணன், தன்னிடம் கையில் பணமாக இல்லை என்று சொன்னதால், “நான் சொல்லும் நம்பருக்கு கூகுள் பே மூலமாக, இருக்கும் பணத்தை அனுப்பு” என்று காவலர் அமிர்தராஜ் 4,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்றிருக்கிறார். இது தொடர்பாக, மணிமங்கலம் போலீஸில் இன்ஜினீயர் கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், காவலர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார்கள்” என்றனர்.

செய்யறது மொள்ளமாரித்தனம்... அதுல டெக்னாலஜி வேற!