சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

தொழிலதிபர்களிடம் பிளாக்மெயில்... துப்பாக்கிமுனையில் சிக்கிய பிரபல ரௌடிகள்... ‘பகீர்’ பின்னணி!

ஈஸ்வரன், யுவராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஈஸ்வரன், யுவராஜ்

கைது செய்யப் பட்டிருக்கும் ஈசா என்கிற ஈஸ்வரன், `எலி யுவராஜ்’ என்கிற யுவராஜ் இருவரும் வடசென்னையின் ஏ ப்ளஸ் கேட்டகிரி ரௌடிகள்.

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்து வந்த பிரபல ரௌடிகள் ஈசா, யுவராஜ் இருவரையும் பெங்களூருக்குச் சென்று துப்பாக்கிமுனையில் கைதுசெய்திருக்கிறது சென்னை போலீஸ். வடசென்னையைச் சேர்ந்த பிரபல தாதா ஒருவரின் வலது கரங்களான இவர்கள் இருவரும், தொழிலதிபர்களை பிளாக்மெயில் செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்ததும், பெண்களுடன் ஜாலியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

வக்கீல் டு ரெளடி

இந்த இரண்டு ரௌடிகளின் பின்னணி குறித்து உள்வட்டங்களில் விசாரித்தோம். “தமிழக காவல்துறைக்குச் சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் பிரபல தாதா `சம்போ’ செந்தில். தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர், கல்வெட்டு ரவி உள்ளிட்ட வடசென்னை ரௌடிகள் சிலருக்கு வழக்கறிஞராக இருந்தார். ஒருகட்டத்தில், சட்டப் புத்தகத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு ஆயுதங்களைக் கையில் எடுத்த செந்தில், ‘சம்போ’ செந்தில் என்ற அடைமொழியுடன் ரௌடியானார். தொடர் குற்றச் செயல்களால் ‘சம்போ’ செந்திலின் பெயர் காவல் நிலைய எஃப்.ஐ.ஆர்-களில் அடிக்கடி இடம்பிடித்தது. அதோடு அவருக்கு எதிரிகளும் உருவானார்கள்.

ஈஸ்வரன், யுவராஜ்
ஈஸ்வரன், யுவராஜ்

வடசென்னையில் கோலோச்சிவந்த பிரபல ரௌடியான காக்காதோப்பு பாலாஜிக்கும், `சம்போ’ செந்தில் டீமுக்கும் இடையே பெரிய கேங் வார் உருவானபோது, காக்காதோப்பு பாலாஜி தென்சென்னை ரௌடி சி.டி.மணியுடன் ஐக்கியமானார். 2020-ம் ஆண்டு காக்கா தோப்பு பாலாஜி, சி.டி.மணி இருவரும் சென்னை அண்ணாசாலைப் பகுதியில் காரில் சென்றபோது, `சம்போ’ செந்தில் டீம் நாட்டு வெடிகுண்டு வீசி இருவரையும் கொல்ல முயன்றது. அந்த வழக்கில் பலர் கைதானபோதும் ‘சம்போ’ செந்திலை போலீஸாரால் நெருங்க முடியவில்லை. அந்த அளவுக்கு ‘சம்போ’ செந்திலுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது.

புதிய சாம்ராஜ்ஜியம்!

இப்படி `சம்போ’ செந்திலின் தலைமையின்கீழ் உருவான ஒரு புதிய ரௌடி சாம்ராஜ்ஜியம், சென்னை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் தங்களின் நெட்வொர்க்கை பலப்படுத்திக்கொண்டது. ‘சம்போ’ செந்திலின் தளபதிகளாக இருப்பவர்கள்தான் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் பிரபல ரௌடிகள் `ஈசா’ என்கிற ஈஸ்வரனும், `எலி’ யுவராஜும்” என்றனர் விரிவாக.

ஈசா, யுவராஜ் இருவரும் துப்பாக்கிமுனையில் கைதுசெய்யப்பட்ட பின்னணி குறித்து வடசென்னை இணை கமிஷனர் ரம்யபாரதியின் தலைமையிலான தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம். ``வடசென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரௌடிகள் ஈஸ்வரன், யுவராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாங்கா சதீஷ், குருபிரசாத் ஆகியோருக்கும் இடையே ‘ஏரியாவில் யார் கெத்து?’ என்பதில் மோதல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் கைதான இருவரும், பிரபல தாதா `சம்போ’ செந்திலுடன் இணைந்தார்கள். அதன்பிறகு கொலை, ஆயுதக் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பெரிய குற்றங்களில் ஈடுபட்டனர். இருவரையும் கடந்த சில ஆண்டுகளாகத் தேடிவந்தோம். இந்த நிலையில், பெங்களூரில் வாடகை வீட்டில் தலைமறைவாக இருந்த அவர்களைக் கைதுசெய்து சென்னைக்கு அழைத்து வந்தோம்” என்றனர்.

`சம்போ’ செந்தில்
`சம்போ’ செந்தில்

துப்பாக்கி - வெடிகுண்டு!

வடசென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “கைது செய்யப் பட்டிருக்கும் ஈசா என்கிற ஈஸ்வரன், `எலி யுவராஜ்’ என்கிற யுவராஜ் இருவரும் வடசென்னையின் ஏ ப்ளஸ் கேட்டகிரி ரௌடிகள். நவீன ரக துப்பாக்கிகளைக் கையாளுவதில் பயிற்சிபெற்றவர்கள். இருவரும் நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட். இவர்கள்மீது சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நடந்த ரௌடி விஜயகுமார் கொலை வழக்கு, திருப்போரூரில் வழக்கறிஞர் காமேஷ் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களைச் செய்துவிட்டு வெளி மாநிலங்களில் பதுங்கிக்கொள்வதால் அவ்வளவு எளிதாக இவர்களைக் காவல்துறையால் நெருங்க முடியாமலிருந்தது.

தற்போது இருவரும் கைதுசெய்யப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டபோது, புதுவண்ணாரப் பேட்டை பகுதியில்வைத்து, தப்பிச் செல்ல முயன்றனர். மாட்டுமந்தை பகுதியிலிருந்த பாலத்திலிருந்து இருவரும் கீழே குதித்ததில் அவர்களின் கால் எலும்புகள் முறிந்தன. கைதானவர்களிடம் பிரபல தாதா `சம்போ’ செந்தில் குறித்து விசாரித்தபோது, ‘கடந்த பல மாதங்களாக அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றனர். ஆனால், இவர்கள் இருவரும் சென்னையிலிருக்கும் தங்களின் கூட்டாளிகளைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்கிறோம். மேலும், தொழிலதிபர்களை மிரட்டி, பணம் பறித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது” என்றார்.

“ஈசாவும், ‘எலி’ யுவராஜும் பெங்களூரில் தலைமறைவாக இருந்துகொண்டு பிசினஸ்மேன்களை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பணம் ஹவாலா உள்ளிட்ட சட்டவிரோத பிசினஸ் மூலம் சம்பாதித்தது என்பதால், அந்தத் தொழிலதிபர்கள் காவல் நிலையங்களில் புகாரளிக்கவில்லை. அவர்களிடமிருந்து மிரட்டிப் பறித்த பணத்தில் ரௌடிகள் இருவரும், பெண்களுடன் உல்லாசமாக நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பெறப்படும் தகவலின் அடிப்படையில் விரைவில் `சம்போ’ செந்திலும் கைதாகலாம்” என்கிறது காவல்துறை.