அலசல்
Published:Updated:

அரசுப் பள்ளி நூலகப் புத்தகக் கொள்முதலில் முறைகேடு?! - பதிப்பாளர்களின் மனக்குமுறல்...

நூலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
நூலகம்

வகுப்புகளுக்கு ஏற்றவாறு நூல்களை வாங்க மத்திய அரசு வகுத்திருக்கும் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு காற்றில் பறக்கவிட்டிருக்கிறது

அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் அவர்களின் அறிவை வளர்த்துக்கொள்ளவும் அமைக்கப்பட்ட நூலகங்களின், நூல் கொள்முதலுக்காக மத்திய அரசு 2021 - 2022 கல்வி ஆண்டுக்கென 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதில்தான் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது!

நாட்டின் பள்ளிக்கல்வியில் ‘சமக்ர சிக்‌ஷா’ என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தேவையான திட்டங்களை வகுத்து, அதற்காக நிதியும் வழங்கிவருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களின் வாசிப்புத் திறன், பொது அறிவு ஆகியவற்றை அதிகரிப்பதற்காக அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நூலகம் அமைத்து, தகுதியான நூல்களைத் தேர்வுசெய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கிறது. அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை 5,000 ரூபாய், 6, 7, 8 வகுப்புகளுக்கு 13,000 ரூபாய், 9, 10 வகுப்புகளுக்கு 15,000 ரூபாய், ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு 20,000 ரூபாய் என நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள 37,391 அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த சுமார் 30 கோடி ரூபாய் அளவிலான நிதி செலவு செய்யப்படுகிறது. இதில் மிகப்பெரிய முறைகேடு நடப்பதாக எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கொதிக்கிறார்கள்.

நூலகம்
நூலகம்

நோக்கத்தையே சிதைக்கிறார்கள்!

இது தொடர்பாக ரேவதி பதிப்பக உரிமையாளர் முத்து முருகேசன் பேசும்போது, “வகுப்புகளுக்கு ஏற்றவாறு நூல்களை வாங்க மத்திய அரசு வகுத்திருக்கும் விதிமுறைகளை தமிழ்நாடு அரசு காற்றில் பறக்கவிட்டிருக்கிறது. புத்தகங்களைக் கொள்முதல் செய்வதற்குத் தேர்வுக்குழு இருக்கும்போது, அதைப் புறக்கணித்துவிட்டு அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தங்களுக்கு நெருக்கமான பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களைக் கொள்முதல் செய்கிறார்கள். நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்கள்கூட குறிப்பிட்ட பதிப்பாளர்களிடமிருந்தே கொள்முதல் செய்யப்படுகின்றன. குறிப்பாக, கட்சி சித்தாந்தம் பேசும் பதிப்பகங்களின் நூல்கள், அதே பின்னணியைக்கொண்ட படைப்பாளர்களின் புத்தகங்கள் ஆகியவையே கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. பன்முகம்கொண்ட நூல்களை வாசிக்கும்போதுதான் மாணவர்களின் அறிவுத்திறன் வளரும். ஆனால், கையூட்டு பெறுவதற்காக, அரசு கொண்டுவந்த திட்டத்தின் நோக்கத்தையே ஆட்சியாளர்கள் சிதைக்கிறார்கள். பதிப்பாளர்களிடம் இவ்வாறு பாரபட்சம் பார்ப்பது அரசுக்கு அசிங்கமாகத் தெரியவில்லையா?” என்றார் காட்டமாக.

அரசுக்குத்தான் கெட்ட பெயர்!

இது குறித்து அடையாளம் பதிப்பகத்தைச் சேர்ந்த சாதிக், “மாணவர்களின் திறன் வளர்ப்பு, மனநலம் குறித்த புத்தகங்களை வாங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் புத்தகக் கொள்முதல் வழிகாட்டுதல் கூறுகிறது. அது தொடர்பான ஒரு தலைப்புக்கூட கொள்முதல் பட்டியலில் இல்லை. இது குறித்து ஏற்கெனவே முந்தைய திட்ட இயக்குநர் சுதனிடம் ஏழு மாதங்களுக்கு முன்பு முறையிட்டிருக்கிறோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தற்போதைய இயக்குநர் இளம்பகவத்துக்கும் கடிதம் கொடுத்திருக்கிறோம். எங்களின் குறைகள் கவனிக்கப்படுமா என்று காத்திருக்கிறோம்’’ என்கிறார்.

மேலும் சில பதிப்பாளர்களிடம் பேசினோம். “இந்தத் திட்டத்துக்கான முதல் படியே, என்னென்ன தலைப்புகளில் புத்தகம் வேண்டும் என்று விளம்பரப்படுத்துவதுதான். ஆனால், ரகசியத் திட்டமிடல்போல ஒருசில சிண்டிகேட் பதிப்பகங்களே இந்த நூல் கொள்முதலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. தற்போதைய தேர்வுக்குழுவில் இருக்கும் ஒரு சீனியர் புனைவெழுத்தாளர், பெண் எழுத்தாளர் இருவரின் பதிப்பகம், அவர்களின் நண்பர்கள், உறவுக்காரர்களின் பதிப்பகத்திலிருந்து சுமார் 4 கோடி ரூபாய்க்கு நூல்கள் கொள்முதல் ஆகியிருக்கின்றன. குறிப்பாக, முகவரி இல்லாத பதிப்பகத்திலிருந்து பல கோடி ரூபாய்க்கு நூல்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நூல்களும் தரமில்லாத தாள்களில் அச்சிடப்படுபவை. சில பதிப்பகங்கள் ஒரே நூலுக்கு இரு வேறு தலைப்புகள் வைத்து, அட்டையை மட்டும் மாற்றி கொள்முதல் ஆர்டர் பெற்று ஊழல் செய்கிறார்கள். அதிகாரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு, அரசுக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கிறார்கள்” என்றனர் ஆற்றாமையுடன்.

முத்து முருகேசன், இளம் பகவத்
முத்து முருகேசன், இளம் பகவத்

“நூல் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை” என்று எழுத்தாளர்கள் சிலரும் இதை ஆமோதிக்கிறார்கள். அதேபோல, ‘தரமில்லாத காகிதங்களைக்கொண்ட புத்தகங்கள், ஓரிரு ஆண்டுகளில் பைண்டிங் பெயர்ந்து உபயோகிக்கப் பயனற்றதாகிவிடுகின்றன. அதை மாற்றித் தர அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை’ என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களும் புகார் வாசிக்கிறார்கள்.

மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் இளம்பகவத்திடம் விளக்கம் கேட்டோம். “தமிழ்நாட்டில் ஆண்டுக்குப் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் உருவாகின்றன. அவை அனைத்தையும் அரசால் கொள்முதல் செய்ய முடியாது. தேர்வுக்குழு மூலமாகவே தகுதியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படு கின்றன. அதில், குறை இருந்தால் பதிப்பாளர்கள் சுட்டிக்காட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு, தங்களுக்குள் இருக்கும் தொழிற்போட்டியால், பொத்தாம் பொதுவாகக் குறை சொல்கிறார்கள். தற்போது நடைபெற்ற நூல் கொள்முதல் என்பது கடந்த ஆண்டுக்கானது. அதில் தேர்வாகியிருக்கும் நூல்களின் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனவே, அது குறித்த தகவலை வெளியிட முடியாது. நாட்டுடைமையான புத்தகங்களைப் பொறுத்தவரை, தரம்தான் பிரதானம். அதில் நாங்கள் சமரசம் செய்வதில்லை. மேலும், இந்தத் திட்டம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்பட்டுவருகிறது” என்றார்.

மாணவர்களின் அறிவுக்காக வரும் நிதியை அறிவுள்ளவர்கள் வீணடிப்பார்களா?