அரசியல்
அலசல்
Published:Updated:

தூத்துக்குடி வி.ஏ.ஓ கொடூரக் கொலை... அச்சுறுத்தும் மணல் மாஃபியா... தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்

நெல்லை மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக நடைபெற்றுவரும் ஆற்று மணல் கொள்ளை தொடர்பான கொலைகள், அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தைத்தான் காட்டுகின்றன.

தென் மாவட்டங்களில் தொடர்கதையாகிவரும் ஆற்று மணல் கொள்ளையால் மீண்டும் ஓர் உயிர் பலியான கொடூரம் நிகழ்ந்திருக்கிறது!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிவந்த லூர்து பிரான்சிஸை, கடந்த 25-ம் தேதி அவரது அலுவலகத்துக்குள்ளே நுழைந்த இருவர் கொடூரமாக வெட்டிக் கொன்றிருக்கின்றனர். கொலையான லூர்து பிரான்சிஸின் மனைவி போனிஸ்தாள், மகன்கள் அஜேஷ் ஆல்வின், மார்ஷல் ஏசுவடியான், மகள் அருள் விசி ரேச்சல் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த கனிமொழி எம்.பி-யிடம், “எங்கப்பா சிறந்த வி.ஏ.ஓ-வுக்கான விருது வாங்கினவர்... அவரை அநியாயமா கொலை செஞ்சுட்டாங்களே” என விம்மினார் லூயிஸ் பிரான்சிஸின் இளைய மகனான மார்ஷல் ஏசுவடியான்.

நம்மிடம் பேசிய லூர்து பிரான்சிஸின் உறவினர்கள், “பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்தார். மூத்த மகன் ரயில்வேயில் வேலை பார்க்கிறார். வழக்கறிஞருக்குப் படித்த இளைய மகனை நீதிபதியாக்க வேண்டும் என்று விரும்பினார். ஆசிரியர் பயிற்சி முடித்திருக்கும் மகளுக்கு அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது. அதற்குள் அவரை மணல் மாஃபியாக்கள் கொன்றுவிட்டார்களே...” என்றனர் கண்ணீருடன்.

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்
கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்

‘‘நெல்லை மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக நடைபெற்றுவரும் ஆற்று மணல் கொள்ளை தொடர்பான கொலைகள், அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தைத்தான் காட்டுகின்றன. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த சுடலைமுத்து, கொங்கராயன்குறிச்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தேவசகாயம், விஜயநாராயணம் காவலர் ஜெகதீஷ், நம்பியாற்றில் மணல் கொள்ளையைத் தடுத்த இளைஞர் சதீஷ்குமார் என இதுவரை கொலையானவர்களின் பட்டியலில் லூர்து பிரான்சிஸ் பெயரும் சேர்ந்துவிட்டது” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய வி.ஏ.ஓ சங்கத்தினர், “லூர்து பிரான்சிஸ், வி.ஏ.ஓ முன்னேற்ற சங்கத்தின் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத் தலைவராகவும் இருந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு ஆதிச்சநல்லூரில், அரசுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தைச் சிலர் ஆக்கிரமித்திருந்ததைக் கண்டுபிடித்தவர், அதை மீட்க நடவடிக்கை எடுத்தார். அதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் அவரைத் தாக்கினார்கள். அதன் பிறகுதான் கோவில்பத்து கிராமத்துக்கு மாற்றப்பட்டார். அங்கும் தாமிரபரணி ஆற்றில் நடந்த மணல் கொள்ளையைத் தடுக்கும்விதமாகப் பலமுறை போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால் கடந்த 13-ம் தேதி ராமசுப்பு என்பவர்மீது எழுத்துபூர்வமாக புகாரளித்திருக்கிறார். இதையடுத்து லூர்து பிரான்சிஸுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வரவே, தன்னை வேறு இடத்துக்கு பணியிட மாற்றம் செய்யச் சொல்லிக் கேட்டிருக்கிறார். ஆனால், மாவட்ட ஆட்சியர் அதைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றி உளவுத்துறை அதிகாரிகளும் மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இப்போது லூர்து மரணத்துக்குப் பொறுப்பேற்கப் போவது யார்?” என்றனர் குமுறலாக.

தூத்துக்குடி வி.ஏ.ஓ கொடூரக் கொலை... அச்சுறுத்தும் மணல் மாஃபியா... தடுத்து நிறுத்துமா தமிழக அரசு?

இந்த நிலையில், ‘‘இந்தச் சம்பவத்தின் மூலம் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது” என்கிறார், இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரவி அருணன். தென் மாவட்டங்களில் நடக்கும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் அவர் நம்மிடம் பேசுகையில், “கனிம வளக் கொள்ளையை எதிர்ப்பவர்களை மிரட்டுவது, தாக்குவது என இருந்த நிலை மாறி, இப்போது அரசு அதிகாரியையே வெட்டிக் கொல்லும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போய்விட்டது. உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர் அரசு, நிவாரண உதவிகளை அளிப்பதைவிடவும் இதைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

ராமசுப்பு
ராமசுப்பு

தென் மாவட்டங்களில் நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் கல்குவாரிகளில் நடக்கும் விதிமுறை மீறல்களைத் தடுக்க நெல்லையைத் தலைமையிடமாகக் கொண்டு கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்த வேண்டும். அதில், அதிகாரிகளுடன் அரசியல் கலக்காத சமூக அக்கறை கொண்டவர்களையும் இணைத்து, இத்தகைய சம்பவங்களைத் தடுக்க வேண்டும்” என்றார் அக்கறையுடன்.

இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் பேசியபோது, “கொலையில் தொடர்புடைய ராமசுப்பு, அவருக்கு உடந்தையாக இருந்த மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்துவிட்டோம். இதில் ராமசுப்பு மீது ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 13 வழக்குகளும், மாரிமுத்து மீது மூன்று வழக்குகளும் இருக்கின்றன” என்றார்.

ரவி அருணன், பாலாஜி சரவணன், செந்தில் ராஜ்
ரவி அருணன், பாலாஜி சரவணன், செந்தில் ராஜ்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ‘‘நடக்கக் கூடாத ஒரு துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் உறுதியாக.

கனிம வளத்தை மட்டுமல்ல... நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கவேண்டிய கடமையும் அரசுக்கு இருக்கிறது!