சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அசோகன் (63). இவர், ராணுவத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவரின் மனைவி நாகேஸ்வரி (57). இந்தத் தம்பதியருக்கு நவீன் (34), விவேக் (32) என இரண்டு மகன்கள். நவீன், சென்னை மவுன்ட் ரோட்டிலுள்ள ஒரு ரெசிடென்சியில் வேலை பார்த்துவருகிறார். விவேக், ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. மகன்களுக்குத் திருமணம் செய்துவைக்க அசோகனும் நாகேஸ்வரியும் பெண் பார்த்து வந்தனர். ஆனால் எந்த வரனும் சரியாக அமையவில்லை. மகன்களுக்குத் திருமணம் செய்து வைப்பது தொடர்பாக அசோகனுக்கும் நாகேஸ்வரிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது.

இந்த நிலையில் 23.5.2023-ம் தேதி மகன்களுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டும் என நாகேஸ்வரி, அசோகனிடம் கூறினார். அதற்கு அசோகன், ``உறவினர்கள், புரோக்கர்கள் மூலம் பெண் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் திருமணம் செய்து வைப்போம்’’ என நாகேஸ்வரியை சமதானப்படுத்தினார். சமதானமடையாத நாகேஸ்வரி, மகன்களுக்குத் திருமணம் செய்து வைக்க வலியுறுத்தினார். அதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கிவிட்டனர். மறுநாள் காலையில் கண்விழித்த நாகேஸ்வரி, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.
அசோகன், வீட்டுக்கு வெளியில் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து நாகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டது. உடனே அசோகனும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களும் மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது நாகேஸ்வரி, தீயில் எரிந்துக் கொண்டிருந்தார். அருகில் மண்ணெண்ணெய் கேன் உருகிய நிலையில் கிடந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அசோகன், உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து நாகேஸ்வரியைப் பரிசோதித்தனர். அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

நாகேஸ்வரியின் உயிரிழப்பு குறித்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அசோகன் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிவுசெய்த சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, தற்கொலை செய்துகொண்ட நாகேஸ்வரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு நாகேஸ்வரியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவருக்கு இறுதிச்சடங்கு நடந்தது.
நாகேஸ்வரி உயிரிழந்த சோகத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருந்தது. குறிப்பாக நாகேஸ்வரியின் இரண்டாவது மகன் விவேக், மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள், குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறினர். இருப்பினும் விவேக்,யாரிடமும் சகஜமாகப் பேசாமல் அமைதியாக இருந்தார்.

இந்த நிலையில் 25-ம் தேதி காலையில் விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்தும் புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள். தாயின் மீதான பாசத்தில் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.