அரக்கோணம் ரயில் நிலைய சந்திப்பு எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும். இந்த நிலையில், ரயில் நிலையத்துக்குள் கேட்பாரற்றுக் கிடந்த சிறிய பார்சல் பெட்டி ஒன்றைக் கண்ட பயணிகள் சிலர், அருகில் சென்று பார்த்தனர். பார்சலின்மேல், அரக்கோணத்திலுள்ள ஒரு நகைக்கடை பெயரைக் குறிப்பிட்டு, ‘இதற்குள் தாலிச் சரடு, கழுத்து செயின் இருக்கிறது’ என எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், ‘வெடிகுண்டு’ பீதியில் சந்தேகமடைந்த பயணிகள் பார்சலை எடுக்க பயந்து, ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து, பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, அதனுள் உடைந்துபோன டைல்ஸ் கற்களும், ஒரு கடிதமும் இருந்தன.

அந்தக் கடிதத்தில், ‘‘அடுத்தவர் பொருள்களைத் திருடும் உங்களைப் போன்ற மானம் கெட்டவர்கள், இந்த உலகில் வாழத் தகுதியில்லை - இப்படிக்கு கடவுளின் தோழன்’’ என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து, ‘யார் சாமி நீ...’ என்றபடியே போலீஸார் திரும்பிச் சென்றனர். இது பற்றி போலீஸார் பேசுகையில், ‘‘பொதுமக்களை ஏமாற்றுவதற்காக இப்படியான தவறான செயலில் யாரோ செயல்பட்டிருக்கிறார்கள். இப்படிச் செய்வதால், ரயில் நிலையத்தில் பயணிகள் அச்சம் கொள்கிறார்கள். அதே சமயம், பொது இடங்களில் கேட்பாரற்றுக் கிடக்கும் இது போன்ற பொருள்களை எந்தக் காரணமும் கொண்டு மக்கள் எடுக்கவோ, பிரித்துப் பார்க்கவோ கூடாது. உடனே, அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினர்.