Published:Updated:

டாஷ்போர்டில் ரகசிய கேமரா... காருக்குள் கதறும் பெண்கள்... காமப்பசி தீராத காசி!

காசி
பிரீமியம் ஸ்டோரி
News
காசி

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பது காசியின் லேப்டாப். அதிலிருந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்திருக்கிறார்.

பெண்களிடம் நம்பிக்கையாக ஆறுதல் வார்த்தைகள் பேசி, காமவலையில் வீழ்த்தி, நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்து, பணம் கேட்டு மிரட்டிய காசி இப்போது பாளையங்கோட்டைச் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான். இந்த வழக்கின் முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படும் லேப்டாப்பிலிருந்து அழிக்கப்பட்ட வீடியோக்கள், தற்போது ‘ரெக்கவரி’ செய்யப்பட்டிருப்பதால், வழக்கு மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்பவன், தன்னைக் காதலிப்பதாக ஏமாற்றி நெருக்கமாகப் பழகி, அதை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் கேட்பதாக, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த வழக்கில் ஏப்ரல் 24-ம் தேதி காசி கைது செய்யப்பட்டான். காசியின் மொபைல்போனை போலீஸார் கைப்பற்றி ஆராய்ந்தபோது, அவன் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் கிடைத்தன. போலீஸாரின் விசாரணையில், தமிழகம் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்களை காசி தனது வலையில் வீழ்த்தியிருப்பது தெரியவந்தது. ஒரு சிறுமி உட்பட ஆறு பெண்கள் காசி மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த வழக்கு கடந்த மே 27-ம் தேதி சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக இருப்பது காசியின் லேப்டாப். அதிலிருந்த வீடியோக்களையும் போட்டோக்களையும் காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்திருக்கிறார். இதையடுத்து அவரையும் கைதுசெய்தது போலீஸ். அழிக்கப்பட்ட வீடியோக்களையும் போட்டோக்களையும் ‘ரெக்கவரி’ செய்வதற்காக, காசியின் லேப்டாப் சென்னைக்கு அனுப்பிவைக்கப் பட்டது. இப்போது அந்த வீடியோக்கள் ‘ரெக்கவரி’ செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 900 ஜி.பி அளவுக்கு இருக்கும் வீடியோக்களைப் பார்த்து போலீஸாருக்கே வியர்த்துவிட்டதாம். “ஒருவன் 24 மணி நேரமும் இதே வேலையாக இருந்திருந்தால்தான், இந்த அளவுக்கு ஏராளமான வீடியோக்களை எடுத்திருக்க முடியும்; இப்படியும் காமக்கொடூரன் ஒருவன் இருப்பானா?” என்று கொதிப்படைந்திருக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.

டாஷ்போர்டில் ரகசிய கேமரா... காருக்குள் கதறும் பெண்கள்... காமப்பசி தீராத காசி!

இது பற்றி விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல பழகின பெண்கள்கிட்ட காசி நெருக்கமா இருந்த ஆயிரக்கணக்கான வீடியோக்கள் ரெக்கவரி ஆகி வந்திருக்கு. அந்த வீடியோக்கள்ல மட்டுமே சுமார் 150 பெண்கள் காசியால சீரழிக்கப்பட்டிருக் குறது தெரியவந்திருக்கு. கோழிப்பண்ணை, தன்னோட ரூம்னு பல இடங்கள்ல வெச்சு பெண்களைச் சீரழிச்சிருந் தாலும், கார்ல வெச்சுதான் நிறைய பொண்ணுங்களை அவன் பலாத்காரம் செஞ்சிருக்கான். எல்லா வீடியோக்களையும் அவனே மொபைல்ல எடுத்திருக்கான். காரோட டாஷ்போர்டுல மொபைல் கேமராவை ஒளிச்சுவெச்சும் நிறைய வீடியோ எடுத்திருக்கான்.

சில வீடியோக்களைச் சம்பந்தப்பட்ட பெண்களுக்குத் தெரிஞ்சும் எடுத்திருக்கான். சிறுமிகள் தொடங்கி கல்யாணம் ஆன பெண்கள் வரை பலரையும் அவன் சீரழிச்ச காட்சிகள் கிடைச்சிருக்கு. திருநங்கைகளையும் அவன் விட்டுவெக்கலை. சொல்லவே நாக்கூசுற அளவுக்கு அவங்களோட விதவிதமா உடலுறவு வெச்சிருந்திருக்கான். இதையெல்லாம் பார்க்குறபோது முழு நேரமும் அவன் காமத்துக்கு அடிமையாகிட்டான்கிறது தெரியுது. அதேசமயம், பக்கா கிரிமினலா யோசிச்சு, வீடியோவைக் காட்டியே பலர்கிட்ட பணம் பறிக்கிறதையும் தொழிலா வெச்சிருந்திருக்கான்’’ என்றவர், காசி எடுத்த வீடியோவில், அவனிடம் பெண்கள் சிலர் கண்ணீர்விட்டுக் கதறும் காட்சிகளையும் விவரித்தார்.

‘‘ஒரு வீடியோவுல, கார்லவெச்சு ஒரு இளம்பெண்கிட்ட சும்மா பேசிக்கிட்டிருக்கான். திடீர்னு அந்தப் பெண்ணை அந்தரங்கமா தொடுறது, கிஸ் பண்ணுறதுனு சில்மிஷத்தை ஆரம்பிக்கிறான். இதை எதிர்பார்க்காம அந்தப் பொண்ணு எதிர்ப்பு தெரிவிக்குது. ஒருகட்டத்துல கதறியழுது, கண்ணீர்விடுது. கால்ல விழுந்து கெஞ்சுது. ஆனாலும், விடாம பலாத்காரம் பண்றான். அப்புறம் அந்த வீடியோவைக் காட்டி மிரட்டியே திரும்பவும் அந்தப் பொண்ணைத் தன்னோட கோழிப்பண்ணைக்குக் கூட்டிட்டுப் போய் நாசம் பண்ணியிருக்கான். இப்படி நேர்ல மட்டுமில்லாம சில பெண்கள்கிட்ட வீடியோ கால்ல பேசி உணர்ச்சிகளைத் தூண்டியே அந்தரங்கங்களைக் காட்டச் சொல்லி, அதையும் ரெக்கார்ட் பண்ணிவெச்சிருக்கான்.

வீடியோக்கள்ல இருக்கிற பெண்களை அடையாளம் கண்டு, அவங்ககிட்ட புகார் கொடுக்கும்படி வலியுறுத்துறோம். அவங்கள்ல சிலருக்குக் கல்யாணம் ஆகிடுச்சி. பலர் புகார் கொடுக்க முன்வரலை. போன்ல பேசி புகார் கேட்டதுக்குப் பிறகு சிலர் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிடறாங்க. சில பெண்களோட குடும்பத்தினர், எங்ககிட்ட சண்டைக்கு வர்றாங்க. ஆனாலும், ‘பாதிக்கப்பட்டவங்களோட அடையாளம் வெளியே தெரியாம பாதுகாப்போம்’னு நாங்க தைரியம் கொடுக்கறதால, இன்னும் சில புகார்கள் வர வாய்ப்பு இருக்கு” என்றார்.

டாஷ்போர்டில் ரகசிய கேமரா... காருக்குள் கதறும் பெண்கள்... காமப்பசி தீராத காசி!

ஏற்கெனவே இந்த வழக்கில் காசி, அவரின் தந்தை தங்கபாண்டியன், காசியின் நண்பர்கள் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் நண்பர்கள் இருவரும் ஜாமீனில் வந்துவிட்டனர். குற்றத்துக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நண்பரான கெளதம் வெளிநாட்டில் இருக்கிறார். அவரைக் கைதுசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

முதல் தலைமுறையாகக் கல்வி கற்று, சமூக ஊடகங்களுக்கு வருகிற பெண்களை ‘காதல்’ என்கிற பெயரில் வளைத்துச் சீரழிக்கும் பல கயவர்களில் காசியும் ஒருவன். காசி போலப் பலரும் இன்னும் மாட்டிக்கொள்ளாமல் வெளியில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் துணிந்து புகார் தராத வரை, காசியைப் போன்ற ஆபத்தானவர்கள் தொடர்ந்து நம் அருகிலேயே, நமக்குத் தெரியாமல் குற்றங்களை அரங்கேற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். அச்சம் தவிர்த்து குற்றம் களைய வேண்டிய நேரம் இது!