நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகேயுள்ள வடகரையாத்தூர் மேல்முகம் கிராமத்தில், தனியாருக்குச் சொந்தமான தகர சீட், ஓலை வேய்ந்த குடிசைகள், புதுப்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான வெல்ல ஆலைக் கொட்டகை ஆகியவை மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டது. அந்தக் குடிசைகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அந்தக் குடிசைகளுக்குத் தீ வைத்த ஆறு பேர்களை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வடகரையாத்தூர் மேல்முகம் கிராமம் சரளைமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான மூன்று டிராக்டர்கள், தகர வீடு தீ வைக்கப்பட்டது. மேலும், வடகரையாத்தூரில் ஒரு வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து கண்காணித்து, இந்தச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைத் தேடிவருகிறார்கள்.
இப்படி, அடுத்தடுத்த தீ வைப்புச் சம்பவங்களால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர், மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 11-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, போலீஸார் நடவடிக்கை எடுத்து, அந்தக் கொலையைச் செய்ததாக 17 வயது சிறுவனைக் கைதுசெய்தனர். இந்தக் கொலைக்கும், வடமாநிலத் தொழிலாளர் இருவருக்கும் தொடர்பிருப்பதாகச் சிலர் குற்றம்சாட்டினர். இதனால், இந்தத் தொடர் தீ வைப்புச் சம்பவங்கள் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர், வீ.கரைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ஸ்ரேயா சிங், "இந்தப் பகுதியில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். சிலர் தவறாகச் செய்திகளைப் பரப்பி, தேவையற்ற அசம்பாவிதங்களை உருவாக்க நினைப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் கிராமத்தில் அமைதிநிலை காக்க கிராமங்களைச் சேர்ந்த அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கிராம மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும். மேலும், தவறான தகவல்களைச் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.