விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றிய சேர்மனாகப் பணியாற்றிவந்தவர் பஞ்சவர்ணம். சுயேச்சை கவுன்சிலரான பஞ்சவர்ணம், அ.தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவோடு ஒன்றிய சேர்மன் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த நிலையில், வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பஞ்சவர்ணத்துக்கும், கவுன்சிலர்களும் இடையே பிரச்னை இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

இதில், 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 2 கவுன்சிலர்கள் ஆதரவாகவும் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒன்றியசேர்மன் பஞ்சவர்ணத்துக்கு அளித்துவந்த ஆதரவை அ.தி.மு.க திரும்பப் பெறுவதாக அறிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து, பஞ்சவர்ணத்தின் ஒன்றியத் தலைவர் பொறுப்பு பறிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக, நேற்று மாலை டெண்டர் நடைபெறவிருந்தது. இந்தத் தகவல் பஞ்சவர்ணத்துக்குத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பஞ்சவர்ணம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அப்போது, திடீரென தன் தலை வழியாக மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு பஞ்சவர்ணம் தீக்குளிக்க முயன்றிருக்கிறார். இதைப் பார்த்த உறுப்பினர்கள் அவரைத் தடுத்து நிறுத்தினர். இந்தச் சம்பவத்தால், நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாலை நடைபெறவிருந்த டெண்டர் முறையும் ரத்துசெய்யப்பட்டது. இது குறித்து பஞ்சவர்ணத்திடம் பேச முயன்றோம். ஆனால் நம் அழைப்பை ஏற்றுப் பேசிய குடும்பத்தினர், அவருக்கு உடல்நலம் சரியில்லாததால், தற்சமயம் பேச இயலாது எனத் தெரிவித்தனர்.