Published:Updated:

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார்: பல்வீர் சிங் ஐ.பி.எஸ்-மீது 3 பிரிவுகளில் வழக்கு!

பல்வீர் சிங்
News
பல்வீர் சிங்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களின் பற்களை பல்வீர் சிங் பிடுங்கியது தொடர்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தலைமையில் சிறப்பு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார்: பல்வீர் சிங் ஐ.பி.எஸ்-மீது 3 பிரிவுகளில் வழக்கு!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களின் பற்களை பல்வீர் சிங் பிடுங்கியது தொடர்பாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா தலைமையில் சிறப்பு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

பல்வீர் சிங்
News
பல்வீர் சிங்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான பல்வீர் சிங், விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளைக் கொடூரமான முறையில் சித்ரவதைச் செய்து, அவர்களின் பற்களைப் பிடுங்கியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, அவர்மீதான புகார் தொடர்பாக சிறப்பு அதிகாரியான அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை நடத்திவருகிறார்.

விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ்
விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ்

அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று இரண்டாம் கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கும் அவரிடம், இரு இளஞ்சிறார்கள் உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு புகாரைத் தெரிவித்தனர். விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய பல்வீர் சிங்கின் நடவடிக்கை குறித்து முதலில் வெளியில் தெரிவித்த சுபாஷ் என்பவரின் தாத்தா பூதப்பாண்டி என்பவர் விசாரணைக்கு இன்று ஆஜரானார்.

இந்த விவகாரத்தை முதலில் வெளிக்கொண்டு வந்த சுபாஷ் என்பவர் பின்னர், சப்-கலெக்டர் விசாரணையின்போது தாமாகவே கீழே விழுந்ததில் பற்கள் விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார். சுபாஷுக்கு நான்கு மாத கைக்குழந்தை இருக்கும் நிலையில், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவருகிறார்.

பாதிக்கப்பட்ட சுபாஷின் தாத்தா பூதப்பாண்டி
பாதிக்கப்பட்ட சுபாஷின் தாத்தா பூதப்பாண்டி

இந்த நிலையில், சுபாஷின் தாத்தா பூதப்பாண்டி இன்று அமுதா ஐ.ஏ.எஸ் முன்னிலையில் நேரில் ஆஜராகி புகாரளித்தார். பின்னர் பேசிய அவர், “சுபாஷ் என்னுடைய பராமரிப்பிலிருந்து வருகிறார். சிறிய வீட்டில் வசித்துவரும் சுபாஷின் பற்கள் பிடுங்கப்பட்ட பிறகு, போலீஸார் வந்து 45,000 ரூபாய் கொடுத்து ஆதரவாக சாட்சியம் அளிக்கச் சொன்னார்கள். அதன் பிறகு அடிக்கடி வந்து போலீஸார் தொந்தரவு கொடுத்த நிலையில், என் பேரன் எங்கிருக்கிறான் என்பது தெரியவில்லை” என்றார்.

16, 17 வயது மட்டுமே நிரம்பிய இளஞ்சிறார்களையும் பல்வீர் சிங் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்திய நிலையில், அவர்களும் இன்று சாட்சியம் அளித்தனர். ஒரு சிறுவனின் தாயான ராஜேஸ்வரி என்பவர் தன்னுடைய மகனுக்கு நேர்ந்த துயரங்களை விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததுடன், பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மட்டன் கடை நடத்திவந்த சகோதரர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

இந்த நிலையில், பல்வீர் சிங் மீது இன்று நெல்லை மாவட்டக் குற்றப்பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவான 506(1) (உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு காயப்படுத்துதல்), 324 (ஆபத்தை ஏற்படுத்தும் கருவிகள் மூலம் காயத்தை ஏற்படுத்துதல், மற்றும் 326 (கொடுங்காயம் ஏற்படும் அளவுக்கு உடலுறுப்புகளில் ஆபத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் 10-ம் தேதி நடந்த குற்றச் செயல்கள் 24-ம் தேதி வெளியில் தெரியவந்த நிலையில், தற்போதாவது பல்வீர் சிங்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே என பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதி அடைந்திருக்கின்றனர்.