நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வீர் சிங் மூலம் பற்கள் பிடுங்கப்பட்டவர்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் தினந்தோறும் வெளியாகி வருகின்றன. ஏற்கெனவே 9 பேர் புகார் அளித்திருந்த நிலையில், பாப்பாக்குடி காவல் நிலையத்துக்கு உள்பட்ட மேலும் மூவர் தங்களுக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து வெளியில் தெரியப்படுத்தினார்கள். இளைஞர்களான மூவரும் அச்சத்தின் கரணமாக தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உடனடியாக வெளியில் சொல்லவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
வனராஜா (19), இசக்கிபாண்டி (20) மகாராஜன் (20) ஆகிய மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பற்களைப் பிடுங்கியது அம்பலமாகியுள்ளது. அதில், இசக்கிபாண்டி மீது ஏற்கெனவே வழக்கு உள்ள நிலையில் அடிதடி வழக்கில் அழைத்துச் சென்ற போலீஸார், ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் பற்களைப் பிடுங்கியுள்ளார் என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
தந்தை இறந்த இரண்டாம் நாளில் மகாராஜனின் பற்கள் பிடுங்கப்பட்ட சோகம் நடந்து விட்டது.பள்ளக்கால் புதுக்குடி கிராம மக்கள்
பள்ளக்கால் புதுக்குடியைச் சேர்ந்த மகாராஜன், ஜே.சி.பி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். மிகவும் வறுமையான பின்னணி கொண்ட அவரது சகோதரிக்கு கடந்த மாதம் திருமணம் செய்து வைத்திருக்கிறார். மகாராஜனின் தந்தை உடல் நலக்கோளாறு காரணமாக் கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் மறைந்த இரண்டாம் நாளிலே மகாராஜனின் பற்கள் பிடுங்கப்பட்ட சோகம் நடந்துள்ளது.
வனராஜா என்ற 19 வயது இளைஞருக்கு தாய், தந்தை கிடையாது. அதனால் அவர் வேலைக்குச் சென்று தாயின் சகோதரி வீட்டில் தங்கியிருந்துள்லார். எந்த வழக்கும் இல்லாத நிலையில், அவரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஊருக்குள் நிலவிய சாதிய பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தவறுதலாக பிடித்துச் செல்லப்பட்ட வனராஜா அடித்து துன்புறுத்தப்பட்டதுடன், பற்கள் பிடுங்கப்பட்டிருக்கிறார்.

அவரை அழைத்துச் சென்ற போலீஸார், ஸ்டேஷனில் இருந்த ஏ.எஸ்.பி பல்வீர் சிங்கிடம், ‘இவன் கஞ்சா அடிப்பான்’ என தவறாகச் சொல்லியுள்ளனர். அதனால் வெகுண்டெழுந்த அவர் வனராஜாவை அடித்து உதைத்ததுடன் பற்க்ளையும் பிடுங்கியுள்ளார். ஆனால் அவரது கிராமத்தில் விசாரித்தபோது ”அந்த பையன் எந்த வம்புக்கும் போகமாட்டான். அவனுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது” என்று சத்தியம் செய்கிறார்கள்.
பாப்பாக்குடி காவல் நிலையத்தில் நடந்த இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனிடையே, ஏற்கெனவே பற்கள் பிடுங்கப்பட்ட சகோதரர்கள் தொடர்பான விவகாரத்தில் புதிய ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றன.
பாபநாசம் லோயர் கேம்பில் உள்ள மின்வாரிய குடியிருப்பில் வசிக்கும் அருண்குமாரின் பற்கள் பிடுங்கப்பட்டுள்ளன. மின்வாரிய ஊழியரின் மகனான அவரையும், மைனரான அவரது 17 வயது தம்பியையும் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.

பற்கள் பிடுங்கப்பட்டதுடன், வாய் முழுவதும் புண்ணாகி இருந்ததால் அருண்குமாரை அவரது தாயார் ராஜேஸ்வரி என்பவர் 20 நாள்களுக்குப் பின்னர் காவல்கிணறு பகுதியில் உள்ள பல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவரது பற்களைப் பரிசோதித்த மருத்துவர், ஏழு பற்கள் பாதிக்கப்பட்டிருப்தாக்த் தெரிவித்துள்ளார். அத்துடன், 20 நாள்களுக்கு முன்பு அவரது பற்கள் உடைக்கப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங் தாக்குதலில் அருண்குமாரின் பற்கள் உடைந்ததற்கான ஆதாரமாக இது கருதப்படுகிறது. இதனிடையே, பற்கள் பிடுங்கப்பட்டவர்களில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பலர் உள்ளனர். அதனால் பல்வீர் சிங் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.