
ஆன்லைன் ரம்மி
ஒருத்தன ஏமாத்தணும்னா அவன்கிட்ட கருணைய எதிர்பார்க்கக் கூடாது. அவன் ஆசைய தூண்டணும்' சதுரங்க வேட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம் இது. இன்றைய மோசடிகளில் பெரும்பாலானவை இந்த அடிப்படையில்தான் நிகழ்த்தப்படுகின்றன. கொரோனாவால் அனைவரும் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் மற்ற அனைத்தையும்போல இந்த சதுரங்க வேட்டைகளும் ஆன்லைனில்தான் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.
`எளிதில் பணம் வெல்லலாம் வாங்க', `முதலீடு செய்த இரண்டே வாரத்தில் இரு மடங்கு பணத்தைப் பெறுங்கள்' இப்படி வாட்ஸப் பார்வேர்டுகளிலும் விளம்பரங்களிலும் ஏற்கெனவே நிதிச் சுமையில் இருக்கும் சாமானியர்களுக்கு ஆசை காட்டி வலையில் விழ வைத்துவிடுகின்றனர். குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தளங்கள் பலவும் இந்தக் கொரோனா நேரத்தில் பெருமளவில் திளைத்துவருகின்றன. அப்படியான ஒரு சூதாட்டச் செயலிதான் `கேஸ்டோ கிளப்' (Casto Club). இதில் பணத்தை இழந்த விரக்தியில் சென்னையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் குறித்துப் பல முக்கியக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டு அமைந்தகரையில் உள்ள டாட்டூ ஸ்டூடியோ ஒன்றில் பகுதி நேரமாக வேலைபார்த்துவந்தார் நித்திஷ் குமார் என்னும் அந்த இளைஞர். நல்ல தொகையை ஜெயித்துவிடலாம் என்று நம்பி தனது சேமிப்பு மட்டுமல்லாமல் டாட்டூ ஸ்டூடியோவில் இருந்த பணத்தையும் வைத்து இந்த கேஸ்டோ கிளப்பில் ஆடியிருக்கிறார். இதில் மொத்தப் பணத்தையும் இழக்க, விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார் அவர். எப்படிச் செயல்படுகிறது கேஸ்டோ கிளப்?

இந்தச் செயலியில் காட்டப்படும் நிறங்களில் ஒன்றையும் எண்களில் ஒன்றையும் தேர்வு செய்ய வேண்டும். அவற்றின் மீது குறிப்பிட்ட தொகை வரை உங்களால் பந்தயம் கட்ட முடியும். இதைச் செய்ய அனைவருக்கும் இரண்டரை நிமிடம் தரப்படும். அனைவரும் பந்தயம் கட்டி முடித்ததும் ஒரு நிறமும் ஒரு எண்ணும் செயலியில் ஒளிபரப்பப்படும். நீங்கள் தேர்வுசெய்த நிறமும் எண்ணும் அதிலிருந்தால் பந்தயம் வைத்ததைவிட ஒன்பது மடங்கு வரை பணத்தை நீங்கள் வெல்லலாம். இந்தப் பணம் நேராக உங்கள் வங்கிக்கணக்கிற்கே அனுப்பி வைக்கப்படும். எந்த ஒரு ஆட்டத்தைப் போலவும் ஆரம்பத்தில் ஆடும்போது எளிதாக இருப்பதைப் போன்ற ஒரு மாயையை உருவாக்குகிறது கேஸ்டோ கிளப். இதைப் பார்த்துப் பெருந்தொகையைப் பந்தயம் கட்டி அதை இழந்துவிடுகின்றனர் சிலர்.
கேஸ்டோ கிளப் போலப் பல ஆன்லைன் சூதாட்டச் செயலிகள் இணையத்தில் குவிந்துகிடக்கின்றன. முகவரியற்ற இதுபோன்ற செயலிகள் பலவும் மோசடி செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்டவை. இவை எதுவும் கூகுள் ப்ளே ஸ்டோரிலோ, ஆப்பிள் ஆப் ஸ்டோரிலோ இருப்பதில்லை. வாட்ஸப்பில் நண்பர் ஒருவர் பார்வேர்டு செய்ததைப் பார்த்து வந்தவர்களும் யூடியூபில் வீடியோ பார்த்து வந்தவர்களும்தான் அதிகம். `Casto Club-ல் எளிதில் பணம் வெல்வது எப்படி?' என்று மட்டும் யூடியூப்பில் அத்தனை வீடியோக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவைதான் சாமானியனை இதுபோன்ற விளையாட்டுகள் பக்கம் கொண்டுவருகிறது. நித்திஷின் மரணம் ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் முதல் மரணமில்லை. ஆன்லைன் கேமிங் சூதாட்டம் மூலமும் பணத்தை இழந்து கடன் சுமை தாங்காமல் இதற்கு முன்னும் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

இந்த ஆன்லைன் சூதாட்டங்களைப் பற்றிப் பேசும்போது ஆன்லைன் ரம்மி பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. கேஸ்டோ கிளப் போன்ற செயலிகள் இருள் உலகில் செயல்படுகின்றன என்றால், ஆன்லைன் ரம்மி செயலிகள் டிவியில் விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு வெளிப்படையாக இயங்குகின்றன. இருப்பதிலேயே அதிகம் பேர் விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு இதுதான். குறைந்தபட்சம் ஒருமுறையாவது ஆன்லைன் ரம்மி விளம்பரத்தை எங்காவது பார்க்காமல் ஒரு நாள் முடியாது. அந்த அளவுக்குப் பணம் புழங்குகிறது ஆன்லைன் ரம்மியில். ``ஆன்லைன் ரம்மி மூலம் ஆண்டுக்கு 2,200 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்தியாவில் மொத்தம் 5.5 கோடி பேர் இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடிவருகின்றனர். அதில் 30 லட்சம் பேர் தினமும் தவறாமல் விளையாடக்கூடியவர்கள்" என்கிறது இந்தியாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை முறைப்படுத்தும் தி ரம்மி ஃபெடரேஷன்(TRF). ஒவ்வொரு ஆண்டும் 34% வளர்ச்சியும் கண்டுவருகிறதாம் ஆன்லைன் ரம்மி.
சிக்கிம், கோவா போன்ற ஓரிரு மாநிலங்களைத் தவிர இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் சூதாட்டத்துக்குத் தடை இருக்கிறது. சில மாநிலங்களில் குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு போன்றவற்றுக்கு மட்டும் விலக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால், தமிழகம் உள்ளிட்ட பல இந்திய மாநிலங்களில் லாட்டரிச் சீட்டு விற்பனைக்குக்கூடத் தடை நிலவுகிறது. இங்கு பணம் வைத்துச் சீட்டாடுவதும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். பணம் வைத்து எங்கு சீட்டாடினாலும் வழக்கு பதிவுசெய்து கைது செய்ய முடியும். ஆனால், ஆன்லைனில் ரம்மி ஆடினால் சட்ட நடவடிக்கை இல்லை.

இந்தத் தற்கொலைச் சம்பவம் நடந்த சில நாள்களுக்கு முன்புதான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்வது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. ``பொது இடங்களில் ரம்மிபோன்ற சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர்மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்கும் நிலையில், ஆன்லைனில் மட்டும் எவ்வாறு ரம்மி விளையாட அனுமதிக்கின்றனர்?’’ என்று கேள்வி எழுப்பியது உயர்நீதிமன்றம்.
ஆன்லைன் ரம்மி தளங்கள் இன்று இவ்வளவு சுதந்திரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு ஒரு முக்கிய காரணம். ஆன்லைன் ரம்மிக்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ``ஆன்லைன் ரம்மி விளையாட்டு வெறும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிய விளையாட்டல்ல; எதிராளி என்ன யோசிக்கிறார் எனக் கணிக்க வேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிவாகச் சிந்திக்கவேண்டிய ஆற்றல் வேண்டும். இப்படியான திறமைகளின் அடிப்படையில்தான் வெற்றிபெற முடியும் என்பதால் இதை ஒரு சூதாட்டமாகக் கருத முடியாது. எனவே ஆன்லைன் ரம்மிக்குத் தடையில்லை'' என்றது.
மொத்தமாக இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்ய முடியுமா என சைபர் வழக்கறிஞர் சத்திய நாராயணனிடமும் பேசினோம். ``இந்தியாவில் யாரும் எந்த ஒரு தொழிலையும் நடத்துவதற்கான உரிமையை அரசியலமைப்பு சட்டத்தின் 19(1)(g) பிரிவு தருகிறது. இருப்பினும் 19(6) பிரிவு மக்கள் நலனுக்காக இதில் கட்டுப்பாடுகளை அரசால் விதிக்கமுடியும் என்கிறது. மேலும், உச்சநீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத்தான் திறன் சார்ந்த விளையாட்டு எனக் கூறியது. கேஸ்டோ கிளப் போன்ற விளையாட்டுகளுக்கு இந்தத் தீர்ப்பு பொருந்தாது. இவை முற்றிலும் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே ஆடப்படும் விளையாட்டுகள். தெலங்கானா மாநில அரசு, தெலங்கானா விளையாட்டுச் சட்டத்தில் 2017-ம் ஆண்டு திருத்தம் செய்தது. அதன்படி பணத்திற்காக ஆன்லைனில் விளையாடப்படும் எந்த விளையாட்டுமே அங்கு அனுமதிக்கப்படாது. இதுபோன்ற சட்டத்திருத்தத்தைத் தமிழ்நாடு விளையாட்டுச் சட்டத்தில் கொண்டு வருவதற்கான அதிகாரம் தமிழக அரசிடமும் இருக்கிறது.
தடை செய்ய முடியாவிட்டால் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த ஒழுங்குமுறை அமைப்பை அரசு உருவாக்கலாம். ஒரு போட்டியில் எவ்வளவு தொகை வரை பந்தயம் கட்டலாம், ஒரு நாளில் எத்தனை முறை சூதாட்டப் போட்டிகளில் பங்குகொள்ளலாம் போன்ற கட்டுப்பாடுகளை இந்த அமைப்பு கொண்டுவரலாம்’’ என்றார்.

மகாபாரதம் எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை சூது வெவ்வேறு வடிவங்களில் மாற்ற மடைந்துகொண்டே இருக்கிறது. ஆனால், `நிச்சயம் ஜெயித்துவிடலாம்', `போட்டதை யாவது எடுத்துவிடலாம்', `விட்டதைப் பிடிப்போம்' என்ற சூது மனநிலை மட்டும் அப்படியேதான் இருக்கிறது. வெற்றிபெற்றவர்களை மட்டும் காட்டி ``இவ்வளவு ரூபாய் சம்பாதிக்கலாம்’’ என்றுதான் விளம்பரம் செய்யும் இந்த நிறுவனங்கள். இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற விளையாட்டுகளில் பணத்தை வெல்ல முடியுமே தவிர `சம்பாதிக்க' முடியாது.