அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஆன்லைன் மோசடி 2.0 - இந்தியாவின் புதிய சைபர் க்ரைம் ஹப்பாக மாறிய மேவாட்!

ஆன்லைன் மோசடி 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் மோசடி 2.0

`நாங்கள் வங்கியிலிருந்து அழைக்கிறோம். உங்களுக்குப் பரிசுத்தொகை விழுந்திருக்கிறது. கார்டு நம்பர், சிவிவி நம்பர், ஓ.டி.பி உள்ளிட்டவற்றைச் சொல்லுங்கள்

தொழில்நுட்பங்கள் வளர வளர உலகம் முழுக்க சைபர் குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்தியாவில், 2016-ம் ஆண்டில் 12,317-ஆக இருந்த சைபர் குற்ற வழக்குகள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், அதாவது 2021-ல் 52,974- ஆக உயர்ந்திருக்கின்றன என்கிறது மத்தியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை. `இவை பதியப்பட்ட வழக்குகள். பதியப்படாமல் ஆயிரக்கணக்கான சைபர் குற்றச் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கின்றன’ என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பலின் கூடாரமாக இருந்தது ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஜம்தாரா பகுதி. அங்கு படிப்படியாகக் குற்றங்கள் குறைந்துவரும் சூழலில், சைபர் குற்றங்களின் மையமாக மாறியிருக்கிறது மேவாட்!

ஆன்லைன் மோசடி 2.0 - இந்தியாவின் புதிய சைபர் க்ரைம் ஹப்பாக மாறிய மேவாட்!

ஜம்தாராவில் எப்படி ஏமாற்றினார்கள்?

மன்னராட்சிக் காலத்தில் தனிப்பிரதேசமாக இருந்ததுதான் மேவாட் (Mewat) பகுதி. தற்போது ராஜஸ்தான், ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்குள்ளும் அடங்கியிருக்கிறது இந்தப் பகுதி. இந்த மேவாட்டை ஒட்டியிருக்கும் கிராமங்களிலுள்ள இளைஞர்கள் பலரும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு, பணம் சேர்த்துவருவதாகச் சொல்கிறது மத்திய சைபர் குற்றப் பிரிவு. முன்னதாக ஜம்தாரா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இதைத் தொழிலாகவே செய்துவந்தனர். ஜெராக்ஸ் கடை, செல்போன் ரீசார்ஜ் கடை உள்ளிட்ட கடைகளில் டேட்டாக்களைப் பெற்றுக்கொண்டு, அதிலுள்ள நம்பர்களுக்கு போனில் அழைத்து பணம் பறிப்பதுதான் ஜம்தாரா இளைஞர்களின் முழு நேர வேலையாக இருந்தது.

`காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நம்பருக்கும் அழைத்துப் பேச்சுக் கொடுப்பது. அவர்கள் தெளிவாகப் பேசினால் நழுவிக்கொள்வது, இல்லையென்றால் அவர்களை ஏமாற்றுவது’ இதுதான் அந்தப் பகுதி இளைஞர்களின் தினசரி வேலை. `நாங்கள் வங்கியிலிருந்து அழைக்கிறோம். உங்களுக்குப் பரிசுத்தொகை விழுந்திருக்கிறது. கார்டு நம்பர், சிவிவி நம்பர், ஓ.டி.பி உள்ளிட்டவற்றைச் சொல்லுங்கள். பணத்தை உங்கள் கணக்குக்கு அனுப்பிவிடுகிறோம்’ என்று சொல்லி அவர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து ஏமாற்றிவந்தனர். சைபர் க்ரைம் பிரிவின் தீவிர நடவடிக்கைகளால் அங்கு இந்த வகைக் குற்றங்கள் தற்போது ஓரளவு குறைந்திருக்கின்றன. இந்த நிலையில்தான், மேவாட் பகுதியில் புதுமையான வகையில் பணம் பறிக்கும் சைபர் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.

மேவாட்டில் எப்படி ஏமாற்றுகிறார்கள்?

ராஜஸ்தான், ஹரியானா, உத்தரப்பிரதேசம் இந்த மூன்று மாநிலங்களையும் இணைக்கும் இடமாக இருக்கிறது மேவாட். இந்தப் பகுதியிலுள்ள சிறு நகரங்கள், கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ‘கார்டு மேல இருக்கிற நம்பர் சொல்லு சார்...’ என்றெல்லாம் கேட்பதில்லை. ஓ.எல்.எக்ஸ்., ஃபேஸ்புக் உள்ளிட்ட ஆப்கள் மூலம் மோசடி செய்துவருகின்றனர். உதாரணத்துக்கு ஓ.எல்.எக்ஸில், ரூ. 50,000 மதிப்புள்ள செல்போன் ஒன்றை 15,000 ரூபாய்க்கு விற்பதாக விளம்பரம் செய்கின்றனர். போலி சிம் கார்டை வாங்கி அதன் நம்பரையும் அந்த விளம்பரத்தில் இணைக்கின்றனர். யாராவது இது குறித்து அழைத்துப் பேசினால், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்கின்றனர். அவர் எந்த ஊரைச் சொல்கிறாரோ, அங்கிருந்து 300-400 கி.மீ தூரமுள்ள ஒரு பகுதியில் தான் இருப்பதாகச் சொல்கின்றனர். நேரில் சந்தித்தால் சிக்கல் என்பதாலேயே இப்படிச் சொல்கிறார்கள்.

கூடவே, தான் ராணுவத்தில் இருப்பதாகவும், அவசரமாகப் பணம் தேவைப்படுவதால் வாங்கி ஒன்றரை மாதமே ஆன செல்போனைக் குறைந்த விலைக்கு விற்பதாகவும் சொல்லி, அவரது நம்பிக்கையைப் பெறுகின்றனர். முதலில், `யூ.பி.ஐ மூலமாகச் சோதனைக்காக ஒரு ரூபாய் அனுப்புங்கள்’ என்று சொல்கின்றனர். ஒரு ரூபாய் வந்ததும், பதிலுக்கு இரண்டு ரூபாய் அனுப்பி அவர்களது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றனர். பின்னர், `முன்பணமாக 1,000 ரூபாயோ, 2,000 ரூபாயோ அனுப்பிவையுங்கள், கூரியரில் அனுப்பும் பொருள் கிடைத்தவுடன் மீதத் தொகையை அனுப்பினால் போதும்’ என்று கூறி பணத்தை ஏமாற்றுகின்றனர். வேலை முடிந்ததும் சிம் கார்ட்டைத் தூக்கி எறிந்துவிடுகின்றனர். `1,000, 2,000 ரூபாய் என்பதால், இது மாதிரியான குற்றங்கள் குறித்துப் புகார்கள் பெரிதாக வருவதில்லை’ என்று சொல்லப்படுகிறது.

ஆன்லைன் மோசடி 2.0 - இந்தியாவின் புதிய சைபர் க்ரைம் ஹப்பாக மாறிய மேவாட்!

ஆபாச சாட்டிங்!

மேவாட் பகுதி இளைஞர்கள் ஆபாச சாட்டிங் மூலமாகவும் பணப் பறிப்பில் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. ஃபேஸ்புக் உள்ளிட்ட ஆப்களில் பெண்கள் பெயரில் ஃபேக் அக்கவுன்ட் ஆரம்பித்து, அதன் மூலம் ஆண்களுடன் ஆபாசமாக சாட்டிங் செய்ய ஆரம்பிக்கின்றனர். பின்னர், இணையத்தில் கிடைக்கும் அரை நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புகின்றனர். அதைப் பார்த்ததும் வீடியோ காலுக்கு வரும் ஆண்களிடம், போனின் பின்பக்க கேமராவில் சரியாகத் தெரியும்படி மற்றொரு போனில் ஆபாச வீடியோ போட்டுவிடுகின்றனர். உண்மையிலேயே ஒரு பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்று நம்பவைக்கின்றனர். இது முழுவதையும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் முறையில் ரெக்கார்ட் செய்து சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்புகின்றனர். `பணம் கொடுக்கவில்லை என்றால், வீடியோவை உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவோம்’ என மிரட்டிப் பணம் பறிக்கின்றனர். சில சம்பவங்களில் ஆபாச சாட்டிங் ஸ்கிரீன் ஷாட்டுகளை வைத்தே மிரட்டுகின்றனர்.

``இந்த வகைக் குற்றங்களால் ஏமாந்த பெரும்பாலானோர் புகார் தர முன்வருவதில்லை. மேலும், ஒரு நபரிடமிருந்தே 50,000-த்துக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றுகின்றனர்’’ என்கிறது மத்திய சைபர் குற்றப் பிரிவு. மேலும், ``இந்தக் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் பெரும்பாலும், லாரி ஓட்டுநராகவோ, க்ளீனராகவோ இருப்பதால், பல்வேறு நெடுஞ்சாலைகளிலிருந்து குற்றங்களைச் செய்துவிட்டு, ‘சிம் கார்டு’களை வீசிவிடுகின்றனர். எனவே, அவர்களை ட்ராக் செய்வது கடினமாக இருக்கிறது. மோசடி செய்பவர்கள், தங்களுக்கு ஓரளவு பழக்கமுடைய ஒரு சிலரின் வங்கிக் கணக்குகளை வாடகைக்கு எடுத்து அதிலேயே பணத்தைப் போடச் சொல்கிறார்கள். கிடைக்கும் பணத்தில் ஒரு தொகையை அவர்களுக்குக் கொடுத்துவிடுகிறார்கள்’’ என்றும் கூறப்படுகிறது.

``மேவாட்டைத் தாண்டி ராஜஸ்தானின் பரத்பூர், உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுக்கும் இந்த வகை சைபர் குற்றங்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்த மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறோம். மேவாட்டைச் சுற்றி இது தொடர்பாக பேரி கார்டு, சுவர் விளம்பரம் என விழிப்பு உணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்திருக்கிறோம்’’ என்கின்றனர் ராஜஸ்தான், ஹரியானா மாநில காவல்துறையினர்.

நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருப்பதால், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவோர் கூடுதல் விழிப்புடன் இருப்பது நல்லது!