தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரம் அருகேயுள்ள செட்டிமல்லன்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரின் மனைவி சங்கரம்மாள். இவர்களுக்கு பேச்சியம்மாள் என்ற மகளும், பாண்டித்துரை என்ற மகனும் இருக்கின்றனர். பேச்சியம்மாள், தனியார் கல்லூரியில் பி.காம் படித்துவருகிறார். பாண்டித்துரை 11-ம் வகுப்புவரை படித்திருக்கிறார். இந்த நிலையில், பேச்சியம்மாள் பக்கத்து ஊரான புதுப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் காளிமுத்து என்பவரைக் காதலித்துவந்திருக்கிறார்.

காளிமுத்து வேறு சாதியைச் சேர்ந்தவர். இதனால் இவர்கள் காதலுக்கு சின்னத்துரை, ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், பேச்சியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி காளிமுத்துவைத் திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவம் சின்னத்துரை, அவரின் மனைவி சங்கரம்மாளுக்குத் தெரியவந்திருக்கிறது. இதனால், இருவரும் மிகவும் சோகத்தில் இருந்திருக்கின்றனர். சங்கரம்மாள் வீட்டில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
சங்கரம்மாள் உயிரிழந்த தகவலைச் சொல்ல, அவரின் உறவினர்கள் சின்னத்துரைக்கு போன் செய்திருக்கின்றனர். அவரின் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையில், சாயர்புரம் அருகே அடைக்கலாபுரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சின்னத்துரை விஷமருந்திய நிலையில் கிடந்திருக்கிறார். அங்கிருந்தவர்கள் அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

இதற்கிடையில், சின்னத்துரையின் மகள் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் ஊரில் பிரச்னை ஏற்படும் எனக்கருதி இரண்டு கிராமத்திலும் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.