Published:Updated:

சிவகிரி: கோயில் விழாவில் சர்ச்சை... 18 பேர்மீது வழக்கு! - பொதுமக்களின் சாலைமறியலால் பரபரப்பு

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
News
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் விழா தேரோட்டத்தின்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டி.எஸ்.பி வாகனத்தின்மீது தேர் உரசிச் சென்றது. இது தொடர்பாக 18 பேர்மீது வழக்கு தொடரப்பட்டதால் சர்ச்சை.

Published:Updated:

சிவகிரி: கோயில் விழாவில் சர்ச்சை... 18 பேர்மீது வழக்கு! - பொதுமக்களின் சாலைமறியலால் பரபரப்பு

சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் விழா தேரோட்டத்தின்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டி.எஸ்.பி வாகனத்தின்மீது தேர் உரசிச் சென்றது. இது தொடர்பாக 18 பேர்மீது வழக்கு தொடரப்பட்டதால் சர்ச்சை.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
News
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்டம், சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் விழா நடைபெறவில்லை. கடந்த ஆண்டு, உள்ளூர் பிரச்னை காரணமாக தேரோட்டம் நடக்கவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு கோயில் விழாவை, சர்ச்சை எதுவும் இல்லாமல் சிறப்பாக நடத்த சிவகிரி மக்கள் முடிவுசெய்தனர்.

கோயில் விழா சர்ச்சை
கோயில் விழா சர்ச்சை

ஆனால், கோயிலின் தேரை பக்தர்கள் வழிபாட்டுக்காக எந்த இடத்தில் நிறுத்துவது என்பது தொடர்பாக இரு சமுதாயங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு சமுதாயத்தினர் தங்களின் மண்டபத்துக்கு எதிரில் சிறிது நேரம் தேர் நிறுத்தப்பட்டு, வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்கள். அதற்கு எதிர்த்தரப்பினர் மறுப்புத் தெரிவித்ததால் சர்ச்சை நிலவியது.

இது தொடர்பாக சிவகிரி தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சாதிய அடையாளத்துடன் கோயில் வழிபாட்டில் பங்கேற்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதை ஏற்றுக்கொண்டு இரு தரப்பினரும் கோயில் விழாவை நடத்த ஒப்புக்கொண்டனர். அத்துடன், 3-ம் தேதி தேரோட்டம் நடத்தவும், 4-ம் தேதி தெப்பத் திருவிழா நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.

ஜீப்பை உரசிச் செல்லும் தேர்ச்சக்கரம்
ஜீப்பை உரசிச் செல்லும் தேர்ச்சக்கரம்

ஒரு சமூகத்தினரின் மண்டபம் எதிரில் தேர் நிறுத்தப்படும் என எதிர்பார்த்து பக்தர்கள் காத்திருந்தனர். அதனால் அந்த இடத்தின் அருகே சாலையில் டி.எஸ்.பி-யான சுதிர், தனது ஜீப்பை நிறுத்திவைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துவந்திருக்கிறார். ஆனால், தேரை இழுத்து வந்தவர்கள், அந்த இடத்தில் தேரை நிறுத்தாமல் வேகமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். அப்போது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டி.எஸ்.பி-யின் வாகனத்தில் உரசியபடி தேர் சென்றது. நல்வாய்ப்பாக அந்தச் சம்பவத்தில் யாருக்கும், எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அதைத் தொடர்ந்து உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், தேரை இழுத்து வந்தவர்களில் 18 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதில் பழைய வழக்குகள் நிலுவையில் இருந்த சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

சாலைமறியல் போராட்டம்
சாலைமறியல் போராட்டம்

இந்த விவகாரம் ஒரு சமூகத்தினரை அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதனால் காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து, குறிப்பிட்ட சமூகத்தினர் ஏராளமானோர் திரண்டு வந்து சாலையில் ஊர்வலமாகச் சென்றதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். கோயில் விழா தொடர்பாக, தங்கள் தரப்பினர்மீது போடப்பட்ட வழக்கை ரத்துசெய்யும் வரை போராடப்போவதாக அவர்கள் அறிவித்திருப்பதால் பதற்றம் நீடிக்கிறது. எனவே, சிவகிரி பகுதியில் நூற்றுக்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.