Published:Updated:

தென்காசி: ”இந்த ரேஷன் அரிசியை அரசியல்வாதிகள் சாப்பிடுவார்களா?” - வண்டு மொய்த்த அரிசிக்கு எதிர்ப்பு!

தென்காசி - ரேஷன் அரிசி
News
தென்காசி - ரேஷன் அரிசி

தென்காசி மாவட்டத்தின் பல கிராமங்களில் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, சாப்பிட லாயக்கற்ற வகையில் வண்டுகள் மொய்த்து, நாற்றம் அடிக்கும் நிலையில் இருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Published:Updated:

தென்காசி: ”இந்த ரேஷன் அரிசியை அரசியல்வாதிகள் சாப்பிடுவார்களா?” - வண்டு மொய்த்த அரிசிக்கு எதிர்ப்பு!

தென்காசி மாவட்டத்தின் பல கிராமங்களில் பொதுவிநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, சாப்பிட லாயக்கற்ற வகையில் வண்டுகள் மொய்த்து, நாற்றம் அடிக்கும் நிலையில் இருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

தென்காசி - ரேஷன் அரிசி
News
தென்காசி - ரேஷன் அரிசி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடமலைப்பட்டி. இந்தக் கிராமத்தில் ரேஷன் கடை இருக்கிறது. அங்கு கடந்த சில தினங்களாக விநியோகம் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தரமற்ற வகையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அங்கு விநியோகிக்கப்படும் அரிசியில் வண்டுகள் மொய்ப்பதுடன், ஒருவித நாற்றம் அடிப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

தரமற்ற அரிசி
தரமற்ற அரிசி

கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அந்த அரிசியை வாங்கிய ஒருவர், அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டிருக்கிறார். அதில் பேசும் நபர், “வண்டுடன் இருக்கும் இந்த அரிசியை யார் சாப்பிட முடியும்... இந்த அரிசியை மனுஷன் சாப்பிட முடியுமா... முதலில், இதை அரசியல்வாதிகள் சாப்பிடுவார்களா... இந்த புழுத்த அரிசியைப் போடுவதைவிட, எங்களுக்கு மருந்து (விஷம்) கொடுத்துக் கொன்றுவிடலாம்” என வேதனையுடன் குமுறுகிறார். அந்த வீடியோ வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கிராமப் பகுதிகளில் இது பற்றி விசாரித்தபோது, ஆலங்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டுமல்லாமல், தென்காசி, செங்கோட்டை, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று மோசமான அரிசியே ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுவதாக பெரும்பாலான குடும்பத் தலைவிகள் வேதனை தெரிவித்தனர்.

வண்டுகள் மொய்க்கும் அரிசி
வண்டுகள் மொய்க்கும் அரிசி

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், “விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல்லிலிருந்து அரிசி எடுத்து பொதுவிநியோகத் திட்டத்துக்குக் கொடுக்கப்படுகிறது. அதற்காக விவசாயிகளிடமிருந்து வாங்கும் நெல்லை அரிசியாக்க 22 அரிசி ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஓரிரு ஆலைகள், விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்காமல் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியை சொற்ப விலைக்கு வாங்கி், பட்டைத்தீட்டி அல்லது அப்படியே மீண்டும் பொதுவிநியோகத் திட்டக் குடோனுக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்த அரிசி மீண்டும் ரேஷன் கடைகளுக்கு வந்து சேரும்போது தரம் இல்லாமல் வண்டுகள் மொய்க்கும் நிலைக்கு உள்ளாகிறது.

தரமற்ற அரிசி விநியோகம்
தரமற்ற அரிசி விநியோகம்

பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி விநியோகம் செய்ய உரிமம் பெற்ற ஒரு சில ஆலைகளில் நடக்கும் இந்த தவறுகளைக் கண்டிக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனத்துடன் கமிஷனுக்காகச் செயல்படுவதால்தான் இது போன்ற தரமற்ற அரிசி பொதுமக்களுக்குக் கிடைக்கிறது” என்று வேதனைப்பட்டார்கள்.

இந்த விவகாரம் குறித்து தென்காசி மாவட்ட குடிமைப்பொருள் விநியோக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “தற்போது தரமற்ற வகையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்ட கடையில் ஆய்வு மேற்கொண்டோம். அங்குள்ள அரிசிக்கு பதிலாக தரமான அரிசியைக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மாவட்டம் முழுவதும் அனைத்து அரிசி ஆலைகளிலும் ஆய்வுசெய்து தரமான அரிசி கிடைக்க வழிசெய்வோம்” என்கிறார்கள்.