தஞ்சாவூர், திருவையாறு அருகேயுள்ள முகமது பந்தர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது காசிம் (64). அதே பகுதியிலுள்ள முகைதீன் ஆண்டவர், மசூதியின் ஜமாத் தலைவராக இருக்கிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கூரியர் மூலம் பார்சல் ஒன்று வந்திருக்கிறது.

தனக்கு கூரியர் வருவதற்கு வாய்ப்பில்லை... தன் மகனுக்கு வந்திருக்கும் என நினைத்து பார்சலை வாங்கிய அவர், அதைப் பிரிக்காமல் வைத்துவிட்டார். அதில் முறையான அனுப்புநர் முகவரியும் இல்லாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில், தன் மகன் முகமது மஹாதீர் வந்த பிறகு பார்சலைக் கொடுத்திருக்கிறார்.
அவர் பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே மண்டை ஓடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மண்டை ஓட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், உடனடியாக திருவையாறு போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறி, தஞ்சாவூர் கீழவாசல் எஸ்.என்.எம் ரஹ்மான் நகரைச் சேர்ந்த மனித நேய ஜனநாயகக் கட்சியின் மாவட்டச் செயலாளரான அப்துல்லா (40), கீழவாசல் ராவுத்தர் பாளையத்தைச் சேர்ந்த முகமது முபின் (23) ஆகிய இருவரைக் கைதுசெய்தனர். தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரைத் தேடிவருகின்றனர். இந்தச் சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். ``பார்சல் வந்த கூரியர் கம்பெனியில் விசாரித்ததில், இதேபோல் மொத்தம் மூன்று பார்சல் வந்ததாகத் தெரிவித்தனர். மற்ற இரண்டு பார்சல்களும் யாருக்கு வந்தது என விசாரிக்கையில், தஞ்சை கீழவாசலில் நாட்டு மருந்துக்கடை வைத்திருக்கும் அதன் உரிமையாளர் இஸ்மாயிலுக்கும், அதே பகுதியிலுள்ள ஒரு நாட்டு மருந்துக் கடையில் வேலை செய்து வரும் சவுக்கத்தலி ஆகியோருக்கும் வந்தது தெரியவந்தது.

உடனடியாக அவர்களைத் தொடர்புகொண்டு பார்சலைக் கைப்பற்றிவிட்டோம். யார் எதற்காக மண்டை ஓட்டை, பார்சலில் அனுப்பினார்கள் என்ற விசாரணையில் இறங்கியபோது மூன்று பேர் சேர்ந்து இதைச் செய்திருக்கின்றனர் எனத் தெரியவந்தது. அதில் அப்துல்லா, முகமது முபின் இருவரையும் கைதுசெய்தோம். தலைமறைவாக இருக்கும் ஒருவரைத் தேடிவருகிறோம். விசாரணையில் அவர்கள் கூறியதாவது, முகமது காசீம் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து ஜமாத் தலைவராக இருந்துவருகிறார். அந்தப் பகுதியில் நடைபெறும் இறப்பு குறித்து முறையாக அறிவிப்பதில்லை. இறுதிச்சடங்குக்கு இடம் வழங்குவதில்லை, அவர் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறார்.

பின்னர், மண்டை ஓட்டை தனித் தனி அட்டைப்பெட்டியில்வைத்து, அதில் எலுமிச்சைப்பழம் வைத்து குங்குமம், மஞ்சள் ஆகியவற்றைத் தெளித்தோம். பார்ப்பதற்கு மாந்திரீகம் செய்ததுபோல் இருக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தோம். பின்னர் கிஃப்ட் பேப்பரில் அட்டைப்பெட்டியை பார்சல் செய்து அவர்களது முகவரியை எழுதி, கூரியர் மூலம் அனுப்பிவைத்தோம்’ என்றனர். அவர்களிடம் மேலும் விசாரணை தொடர்ந்துவருகிறது'' எனத் தெரிவித்தனர்.