திருப்பூர் கருவம்பாளையத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் திருப்பூர் மாநகராட்சி மற்றும் ஐந்து நகராட்சிகளில் கட்டணக் கழிப்பிட ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவரின் மகன் கண்ணன் (26). இவர் லட்சுமி நகரிலுள்ள மாநகராட்சி கட்டணக் கழிப்பிடத்தில் வசூலான பணத்தை வாங்க, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை அன்று சென்றிருக்கிறார்.
அப்போது, காரில் வந்த நான்கு பேர் கண்ணனைக் கடத்திச் சென்றனர். சில மணி நேரம் கழித்து கண்ணனின் தாயை செல்போனில் தொடர்புகொண்டவர்கள், `ரூ.20 லட்சம் கொடுத்தால்தான் கண்ணனை உயிரோடு விடுவோம். இல்லையென்றால் கொன்றுவிடுவோம்' என மிரட்டியிருக்கின்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த மருதமுத்து, திருப்பூர் வடக்கு போலீஸில் புகாரளித்தார்.

உதவி ஆணையர் அனில்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் கண்ணனின் தாய்க்கு வந்த செல்போன் எண்ணை ஆய்வுசெய்ததில், அந்த எண் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், நெகமம் பகுதியிலுள்ள வீட்டில் அடைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணனை மீட்டனர்.
அவரைக் கடத்திய மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த முகமது அனிபா (51), சிவகங்கையைச் சேர்ந்த கார்த்திக் (35), தேனி எல்லப்பட்டியைச் சேர்ந்த சஞ்சீவ் (32), சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த லட்சுமணன் (38) ஆகிய நான்கு பேரைப் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது... முகமது அனிபா மருதமுத்துவிடம் வேலை செய்து வந்திருக்கிறார். மருதமுத்துவிடம் பணம் இருப்பதை அறிந்த முகமது அனிபா, அவரின் மகன் கண்ணனைக் கடத்தி பணம் பறிக்கத் திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, தன்னுடைய நண்பர்களான கோவை காந்திபுரத்திலுள்ள உணவகத்தில் பணிபுரியும் கார்த்திக், சஞ்சீவ், லட்சுமணன் ஆகியோரிடம் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு அவர்களும் சம்மதித்திருக்கின்றனர். கண்ணனைக் கடத்தி பணம் பறித்தால், அதில் ஒரு தொகையைத் தருவதாக முகமது அனிபா தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நண்பர்கள் மூன்று பேரையும் திருப்பூருக்கு வரவழைத்த முகமதுஅனிபா, புஷ்பா தியேட்டர் ரவுண்டானா அருகேயுள்ள லாட்ஜில் தங்கவைத்திருக்கிறார்.

கண்ணன் தினமும் கழிப்பிடக் கட்டண வசூல் பணத்தை வீட்டுக்குக் கொண்டுசெல்வதை நான்கு பேரும் இரண்டு நாள்களாக நோட்டமிட்டிருக்கின்றனர். முகமது அனிபா அவரைக் கடத்த மளிகைக்கடை நடத்திவரும் தன்னுடைய நண்பர் ஒருவரிடமிருந்து காரை வாங்கியிருக்கிறார். அதன் மூலம் கண்ணனைக் கடத்தியிருக்கிறார்.
பின்னர் நெகமத்துக்குச் சென்ற அவர்கள் அங்கிருக்கும் வீட்டில் கண்ணனை அடைத்துவைத்ததுடன், கண்ணனின் தாய்க்கு போன் செய்து ரூ.20 லட்சம் பணம் கேட்டிருக்கின்றனர். பணம் கொடுக்காவிட்டால் கொன்றுவிடுவோம் என மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.