வேலூர் அருகேயுள்ள சித்தேரி பகுதியைச் சேர்ந்த மோகன் - விஜயா தம்பதியின் 26 வயது மகன் பிரகாஷ். இவர், பாட்டாளி மக்கள் கட்சியில், அன்புமணி தம்பிகள் படை மண்டலச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதான ராமகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. ராமகிருஷ்ணனும் பா.ம.க-வில்தான் இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற வேலூர் மாநகராட்சி தேர்தலின்போது ராமகிருஷ்ணன் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார். இந்தப் பகுதிக்குள் ஒரே சமூக மக்கள் பெரும்பான்மையாக வசிப்பதால், அவர்கள் பா.ம.க-வை ஆதரித்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில், தி.மு.க-வை வளர்த்தெடுப்பதற்காக முயன்றிருக்கிறார் ராமகிருஷ்ணன். இதைத் தடுக்கும் விதமாக இளைஞர் பிரகாஷ் செயல்பட்டு வந்ததால், இருவருக்கும் இடையேயான மோதல் ‘பகையாக’ மாறியிருக்கிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, அவரின் புகைப்படத்துடன் கூடிய பேனரை ராமகிருஷ்ணன் தனது பகுதியில் வைத்திருக்கிறார். அந்த நாளில், அன்னதானம் வழங்கவும் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ் தனது ஆதரவு இளைஞர்களுடன் சென்று கருணாநிதி பேனரை அகற்றச் சொல்லியிருக்கிறார். அன்றைய தினம் இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பஞ்சாயத்து, காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது.
இருதரப்பு மீதும் புகாரைப் பதிவுசெய்த போலீஸார், சமரசம் செய்து அனுப்பிவைத்திருக்கிறார்கள். இதையடுத்து, ராமகிருஷ்ணனை தீவிரமாக எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார் பிரகாஷ். கூடவே பகையும் வளர்ந்தது. ‘ஊருக்குள் இருந்த மரியாதை சரியவும், பலர் என்னை எதிர்க்கவும் பிரகாஷ்தான் காரணம். இவனை இனியும் விட்டு வைக்கக் கூடாது’ என்று ராமகிருஷ்ணன் சரியான நேரம் பார்த்து, ஏற்கெனவே கொலைவெறியுடன் காத்திருந்தாராம்.
இந்த நிலையில்தான், நேற்று மாலை வேலூர் பெண்கள் சிறை அமைந்திருக்கும் தொரப்பாடி பகுதி வழியாக சித்தேரிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்த பிரகாஷை இரும்பு ராடால் கொடூரமாகத் தாக்கி கொலைசெய்திருக்கிறார் ராமகிருஷ்ணன். சம்பவம் நடந்த பகுதியில்தான் ராமகிருஷ்ணன் டிஜிட்டல் பேனர் கடை வைத்திருக்கிறார். அந்த வழியாகத் தனது எதிரி பிரகாஷ் வருவதைப் பார்த்த உடனேயே, கடைக்குள் இருந்த பெரிய அளவிலான இரும்பு ராடு ஒன்றை எடுத்துவந்து, வழிமறித்து கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். தனக்குள் இருந்த பகையை மொத்தமாக தீர்த்துக்கொள்வதற்காக பிரகாஷின் தலையை குறிவைத்து நான்கு முறை ஓங்கி அடித்திருக்கிறார். இதில் நிகழ்விடத்திலேயே பிரகாஷ் துடி துடித்து உயிரிழந்தார்.

நடுரோட்டில் நடந்த இந்த கொடூரச் சம்பவத்தைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியில் பதறிப் போயினர். பிரகாஷை தீர்த்துக்கட்டிய பின்னர் அங்கிருந்து ராமகிருஷ்ணன் தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்ததும், வேலூர் டி.எஸ்.பி திருநாவுக்கரசு மற்றும் பாகாயம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, தப்பி ஓடிய கொலையாளி ராமகிருஷ்ணனை அடுத்த மூன்று மணி நேரத்துக்குள்ளேயே தேடிப் பிடித்து கைதுசெய்தனர். தொடர் விசாரணைக்குப் பின்னர், இன்று காலை நீதிமன்றக் காவலில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் ராமகிருஷ்ணன். அதே சமயம், பிரேத பரிசோதனை முடிந்து இளைஞர் பிரகாஷின் உடலும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால், போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.