சென்னை திருவெற்றியூர், ஏகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் துரை. இவரின் மனைவி இந்திராணி (48). இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். வேலைக்குச் சரிவர செல்லாமல் இருந்திருக்கிறார் துரை. அதனால் இந்திராணி, அந்தப் பகுதியிலுள்ள கடையில் வேலை பார்த்து, குடும்பத்தை நடத்திவந்தார். இந்திராணியின் வருமானம் குடும்பத்தை நடத்த போதவில்லை. அதனால் இந்திராணியின் குடும்பம் வறுமையில் வாடியிருக்கிறது.
குடும்பத்தை நடத்த முடியாமல் கஷ்டப்பட்ட இந்திராணி, தன்னுடைய கணவர் துரையிடம் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லுங்கள் என்று அடிக்கடி சொல்லிவந்திருக்கிறார். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத துரை, வழக்கம்போல வீட்டிலேயே இருந்துவந்திருக்கிறார்.

இதையடுத்து துரையிடம் சண்டை போட்டுவிட்டு, இந்திராணி, தன்னுடைய சகோதரி கஸ்தூரி என்பவரின் வீட்டின் அருகே தங்கினார். அதன் பிறகு மனைவியைப் பார்க்க துரை அடிக்கடி அங்கு வந்து செல்வது வழக்கம். அப்போதெல்லாம் கணவரை வேலைக்குச் செல்ல இந்திராணி வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், இந்திராணியைச் சந்திக்க இன்று காலை துரை வந்தார். அப்போது கணவனுக்கும், மனைவிக்குமிடையே வேலைக்குச் செல்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த துரை, வீட்டிலிருந்த உலக்கையை எடுத்து இந்திராணியின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். இதில் அவர் மயங்கி விழுந்தார்.
இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் சகோதரி கஸ்தூரி, அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது கையில் ரத்தக்கறை படிந்த உலக்கையோடு நின்றுகொண்டிருந்த துரை, கஸ்தூரியைப் பார்த்து, `இனி இந்திராணி உன் வீட்டுக்கு வர மாட்டாள்' என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.
அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கஸ்தூரி, வீட்டுக்குள் சென்று பார்த்திருக்கிறார். அங்கு ரத்த வெள்ளத்தில் இந்திராணி மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவரின் குடும்பத்தினர் கொண்டுசென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், இந்திராணி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இந்திராணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தலைமறைவாக இருந்த துரையைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
விசாரணையில் துரை, கடந்த 11 ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவந்தது தெரியவந்தது. வேலைக்குச் செல்ல தன்னை வற்புறுத்தியதால், இந்திராணியை அடித்துக் கொலைசெய்துவிட்டதாக துரை தெரிவித்ததாக போலீஸார் கூறினர். விசாரணைக்குப் பிறகு துரையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.