சென்னை, மாம்பலம் பகுதியிலுள்ள ஒரு தனியார் தங்கநகைக்கடையில் மேலாளராக இருப்பவர் சத்தியநாராயணன். இவர் மாம்பலம் பகுதி காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார். அதில், `எங்கள் நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் நகைகளைப் பழுதுநீக்கித் தருவதற்கும், சரிசெய்வதற்கும் கொடுப்பது வழக்கம். அப்படி வாடிக்கையாளர்கள் 347 கிராம் தங்கநகைகளைக் கொடுத்திருந்தார்கள்.

எங்கள் கடையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் நகைகளைப் பழுதுநீக்கும் வேலையை பிரபீர் ஷேக் என்பவர் செய்துவந்தார். இவர், கடைக்குப் பழுதுநீக்க வந்த நகைகளை அடகுவைத்து மோசடி செய்திருக்கிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுத்து நகைகளை மீட்டுத் தர வேண்டும்’ என்று அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் மாம்பலம் பகுதி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். குற்றம்சாட்டப்பட்ட சிஐடி நகர்ப் பகுதியைச் சேர்ந்த பிரபீர் ஷேக்கைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் நகைகளை அடகுவைத்ததை ஒப்புக்கொண்டார். வாடிக்கையாளர்கள் பழுதுநீக்கக் கொடுத்த 347 கிராம் தங்கநகைகளைத் தன் நண்பர் பாலமுருகனிடம் கொடுத்து அடகுவைத்ததாகக் கூறினார்.

இதையடுத்து, போலீஸார் வியாசர்பாடி எம்.கே.பி நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இருவரும் கூட்டுச் சேர்ந்து நகைகளை அடகுவைத்து மோசடி செய்தது தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் அடகுவைத்த நகைகளை மீட்கும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டுவருகிறார்கள்.