சென்னையைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று இரவு ஆட்டோவில் மெரினா - பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் அடையாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அந்த சாலையில் அதிக காற்று வீசியதால் ஆட்டோ ஓரமாக நின்றது. அப்போது அங்கே கடற்கரையில் மதுபோதையிலிருந்த நான்கு பேர்கொண்ட கும்பல் ஆட்டோ நிற்பதைப் பார்த்து அருகில் வந்திருக்கிறது.

அப்போது அவர்கள், `அதிகமாக மழை பெய்கிறது, நாங்கள் ஆட்டோவில் உட்கார்ந்துகொள்கிறோம்' என்று கேட்டிருக்கிறார்கள். ஆட்டோவில் பெண் இருக்கிறார் என்று ஆட்டோ ஓட்டுநர் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதையும் மீறி அந்தக் கும்பல் ஆட்டோவில் நுழைந்திருக்கிறது. மேலும், அதில் ஒருவன் வைத்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து, அந்த பெண்ணின் கழுத்தில் வெட்டியிருக்கிறான்.
இதைப் பார்த்துப் பயந்த ஆட்டோ ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். தொடர்ந்து அந்த மதுபோதைக் கும்பல் அந்தப் பெண்ணை அடித்து அவர் காதிலிருந்த அரை சவரன் தங்கத் தோடு, 4,000 ரூபாய் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு தப்பியோடியிருக்கிறது. வலியில் சாந்தி அலறிக் கூச்சலிட்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் எதிர்ச் சாலையில் ரோந்துப் பணியிலிருந்த காவலர்கள் இதைப் பார்த்திருக்கிறார்கள். ஓடிய நான்கு போரையும் காவலர்கள் துரத்திச் சென்றனர். நான்கு பேரில் மூவர் வெவ்வேறு திசையில் ஓடிவிட, ஒருவர் மட்டும் கடலுக்குள் நீந்திச் சென்றிருக்கிறார். உடனே இரண்டு காவலர்கள் உள்ளே குதித்து அவரைப் பிடித்து கரைக்கு இழுத்து வந்திருக்கின்றனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர், அயனாவரத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பதும் அவர்மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. தப்பியோடிய மூவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்களை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
மதுபோதை கும்பல் தாக்கியதில் முகம், கழுத்தில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் பெண்ணின் கழுத்தை அறுத்து வழிப்பறி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.