கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவதற்காக ரூ.30,000 பணம் கேட்டுத் தரவில்லையென்றால் மனைவியைக் கொன்றுவிடுவதாகக் கூறி மற்றோர் இளைஞர் ஒருவரை டூ வீலரிலேயே சென்னை வரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தலில் ஈடுப்பட்ட இளைஞரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருநல்லூரைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு, வயது 43. திருமணமான இவர் மரப்பொருள்கள் தயாரிக்கும் வேலை செய்துவருகிறார். பாபநாசம் அருகேயுள்ள உத்தமதானியைச் சேர்ந்தவர் உத்திராபதி (25) கூலி வேலை செய்துவந்திருக்கிறார். உத்திராபதிக்கு ரமேஷ்பாபுவுடன் ஏற்கெனவே அறிமுகம் இருந்திருக்கிறது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற ரமேஷ்பாபுவை ரூ.30,000 கேட்டு உத்திராபதி கடத்தியிருக்கிறார். `பணம் தரவில்லையென்றால் உன் மனைவியைக் கொன்றுவிடுவேன்’ என மிரட்டியதுடன், கத்தியைக் காட்டி பணம் கேட்டிருக்கிறார். பயந்துபோன ரமேஷ்பாபு, வேறி வழி தெரியாமல் உத்திராபதி கேட்ட பணத்தைக் கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகும் ரமேஷ்பாபுவை விடாத உத்திராபதி அவரது டூ வீலரிலேயே அவரை சென்னைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். கணவர் வீடு திரும்பாதது கண்டு பயந்துபோன ரமேஷ்பாபுவின் மனைவி போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாவட்ட எஸ்.பி ரவளிபிரியா, எஸ்.ஐ கீர்த்திவாசன் தலைமையில் குற்றவாளியை உடனே கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் போலீஸார் உத்திராபதியைக் கைதுசெய்ததுடன், டூ வீலரையும் பறிமுதல் செய்தனர். உத்தரவிட்ட 24 மணி நேரத்தில் அதிரடி ஆக்ஷனில் ஈடுப்பட்ட போலீஸ் டீமை எஸ்.பி ரவளிபிரியா பாராட்டியிருக்கிறார். இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம், ``செல்போன் வாங்குவதற்காக ரூ.30,000 பணம் கேட்டு ரமேஷ்பாபுவைக் கடத்திய உத்திராபதி, பணம் தரவில்லையென்றால் மனைவியைக் கொன்றுவிடுவேன் என மிரட்டியிருக்கிறார்.

ரமேஷ்பாபு பணம் கொடுத்ததும், புதிய செல்போன் ஒன்றை வாங்கியிருக்கிறார். முன்னதாகவே, `நான் போற இடத்துக்குச் சத்தம் போடமா வரணும். இல்லைன்னா கத்தியால குத்திடுவேன்’ என மிரட்டியிருக்கிறார். ரமேஷ்பாபுவின் டூ வீலரை வாங்கி அவரைப் பின்னால் உட்கார வைத்து சென்னை வரை சென்றிருக்கிறார் உத்திராபதி.
செல்போன் வாங்கியது போக மீதமிருந்த பணத்தில் ஜாலியாகச் செலவு செய்திருக்கிறார். மீண்டும் ரமேஷ்பாபுவை அழைத்துக்கொண்டு சென்றவர், அவரை விழுப்புரத்தில் இறக்கிவிட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பான புகார் வந்த அடுத்த 24 மணி நேரத்தில் உத்திராபதி பயன்படுத்திய செல்போனை வைத்து ட்ராக் செய்து கைதுசெய்திருக்கிறோம். அவர் வைத்திருந்த டூ வீலரையும் பறிமுதல் செய்திருக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்துவருகிறது’ எனத் தெரிவித்தனர்.