சென்னை வளசரவாக்கம், பாபு தெருவைச் சேர்ந்தவர் ராம்குமார். இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 8.2.2023-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். சினிமாத் துறையில் இயக்குநராக இருக்கிறேன். மேலும் இளம் நடிகர்களுக்கு பயிற்சி அளித்துவருகிறேன். எனக்கும் திருச்சியைச் சேர்ந்த கண்மணி (பெயர் மாற்றம்) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கண்மணிக்கு ஏற்கெனவே திருமணமாகி பெண் குழந்தை இருக்கிறது. கண்மணியின் கணவர், விபத்தில் உயிரிழந்துவிட்டார். அதனால் நானும் கண்மணியும் அவரின் மகளும் சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்.
இந்த நிலையில் கண்மணியின் குடும்ப நண்பரான திருச்சியைச் சேர்ந்த ஜெயராம் பாண்டியன் என்பவர் கண்மணிக்கு சொல்ல முடியாத தொல்லைகளைக் கொடுத்து வந்தார். வாட்ஸ்அப்பில் அசிங்கமான மெசேஜ்களை அனுப்பி வந்தார். மேலும் கண்மணிக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். எனவே ஜெயராம் பாண்டியன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பேரில் வளசரவாக்கம் போலீஸார், மூன்று சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து ஜெயராம் பாண்டியனை தேடிவந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில், ஜெயராம்பாண்டியன் தலைமறைவாக இருந்த இடம் குறித்த தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் அவரைக் கைதுசெய்து விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸார், ``கண்மணியின் போட்டோஸை மார்பிங் செய்து ஜெயராம் பாண்டியன், அவருக்கு அனுப்பி டார்ச்சர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஜெயராம் பாண்டியனிடம் விசாரித்தபோது, அவர் வேறு ஒரு தகவலைத் தெரிவித்தார். முரண்பட்ட தகவலால் இருதரப்பினரிடமும் விசாரித்து வருகிறோம். மேலும் ஜெயராம்பாண்டியன், கண்மணிக்கு ஆபாச மெசெஜ்களை அனுப்பியதற்கான ஆதாரங்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.