Published:Updated:

திருமண ஆசையில் ரூ.14 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்; ஆசைகாட்டி ஏமாற்றிய 2 குழந்தைகளுக்குத் தாய் கைது!

அரசு ஊழியரை ஏமாற்றிய வழக்கில் கைதான சரண்யா
News
அரசு ஊழியரை ஏமாற்றிய வழக்கில் கைதான சரண்யா

அரசு ஊழியரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்தைகளைக் கூறி, லட்சக்கணக்கில் ஏமாற்றிய பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:

திருமண ஆசையில் ரூ.14 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்; ஆசைகாட்டி ஏமாற்றிய 2 குழந்தைகளுக்குத் தாய் கைது!

அரசு ஊழியரிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்தைகளைக் கூறி, லட்சக்கணக்கில் ஏமாற்றிய பெண்ணை போலீஸார் கைதுசெய்தனர்.

அரசு ஊழியரை ஏமாற்றிய வழக்கில் கைதான சரண்யா
News
அரசு ஊழியரை ஏமாற்றிய வழக்கில் கைதான சரண்யா

சென்னை புதுபெருங்களத்தூர் 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ``நான் மேற்கண்ட முகவரியில் என்னுடடைய அம்மாவுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறேன். நான் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இளநிலை உதவியாளராகப் பணியாற்றிவருகிறன். சரண்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் நான் போனில் பேசத் தொடங்கினேன். கடந்த ஓராண்டாக என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சரண்யா என்னுடன் பேசிவந்தார். அப்போது சரண்யா, மருத்துவச் செலவு மற்றும் அவருடைய சொந்தக் காரணங்களைக் கூறி, என்னிடம் 14 லட்சம் ரூபாய் வரை வாங்கினார். பணத்தை கூகுள் பே, வங்கி மூலம் சரண்யாவுக்கு அனுப்பிவைத்தேன்.

திருமணம்
திருமணம்

ஒருகட்டத்தில் என்னுடைய கடன் சுமை அதிகமாகவே, பணத்தைத் திரும்பத் தரும்படி சரண்யாவிடம் கேட்டேன். ஆனால், அவர் என்னுடைய செல்போன் நம்பரை பிளாக் செய்துவிட்டார். மேலும், பணத்தைத் தராமல் இழுத்தடித்துவருகிறார். இந்த நிலையில் சரண்யா இறந்துவிட்டதாக அவரின் கைபேசியிலிருந்து தோழி என்று கூறி, ஒருவர் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். சரண்யா இறப்பதற்கு முன்பு அவர் தோழியிடம் பணம் தந்து அனுப்புவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, `40,000 ரூபாய் கொடுங்கள், 11 லட்சம் ரூபாய் தருகிறேன்' என்றும் எஸ்.எம்.எஸ் அனுப்புகிறார்கள். இன்று வரை எந்தப் பணமும் தரவில்லை. எனவே என்னுடைய பணத்தை பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, ஐபிசி 406, 420 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பீர்க்கன்காரணை போலீஸார் நம்மிடம் பேசுகையில், ``கைதுசெய்யப்பட்ட சரண்யா, சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சரண்யாவுக்கும் நாகராஜனுக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அப்போது சரண்யா, தன்னுடைய இளமைக்கால புகைப்படத்தை நாகராஜனுக்கு அனுப்பி, தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று பொய் சொல்லியிருக்கிறார். அதை உண்மையென நாகராஜனும் நம்பியிருக்கிறார்.

கைது
கைது

இதையடுத்து சரண்யாவைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் அவர் கேட்கும்போதெல்லாம் நாகராஜன் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் சரண்யாவுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் தகவல் நாகராஜனுக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து நாகராஜன் கொடுத்தப் புகாரின் அடிப்படையில், சரண்யாவைக் கைதுசெய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.