திருச்சி, மத்தியப் பேருந்து நிலையத்திலுள்ள தனியார் ஹோட்டலில், 17 வயதுச் சிறுமியை அடைத்துவைத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் நேற்று கண்டோன்மென்ட் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணையும், அவரை ஹோட்டல் அறையில் அடைத்துவைத்து, பாலியல் தொல்லை கொடுத்த பிரபின் கிறிஸ்டல்ராஜ் என்பவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த 17 வயது சிறுமி சொன்ன தகவல்களையெல்லாம் கேட்டு போலீஸாரே அதிர்ந்து போயினர்.

திருச்சி துவாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் இந்த 17 வயது சிறுமி. சிறுமியின் தந்தை இறந்துபோனதால், 9-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்திருக்கிறார். இந்த நிலையில், 2021-ம் ஆண்டு சிறுமிக்கு 15 வயதே ஆன நிலையில், பெரம்பலூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு, சிறுமியின் தாய் நித்தியா திருமணம் செய்துகொடுத்திருக்கிறார்.
குழந்தைக்குத் திருமண அதிர்ச்சி ஒருபுறம், பாலமுருகனின் பாலியல் கொடுமை இன்னொருபுறமென சிறுமி கடும் மனஉளைச்சலில் இருந்திருக்கிறார். இதற்கிடையே, குழந்தைப்பேறு இல்லையென்று சொல்லி பாலமுருகனின் பெற்றோர், சிறுமியை வீட்டைவிட்டு விரட்டி அடித்திருக்கின்றனர்.
அம்மா வீட்டிலாவது பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என நம்பி சென்றிருக்கிறார் அந்தச் சிறுமி. ஆனால், அதன் பிறகு நடந்ததுதான் கொடூரத்தின் உச்சம். நித்தியா தான் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் போக, திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த ரமீஜா பானு என்ற பெண்மணியிடம் 'வேலைக்குப் போ!' எனச் சொல்லி தன்னுடைய 17 வயது மகளை வேலைக்கு அனுப்பியிருக்கிறார்.

ரமீஜா பானு, பெண்களை வைத்து தவறான தொழில் செய்துவந்திருக்கிறார். இது தெரிந்தே நித்தியா தன்னுடைய மகளை அவரிடம் அனுப்பிவைத்திருக்கிறார். ரமீஜா பானுவோ, கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரபின் கிறிஸ்டல்ராஜ் என்பவரிடம் இந்தச் சிறுமியை அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்.
பிரபின் கிறிஸ்டல்ராஜ் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார். 'உன் வீடியோ எல்லாம் என்கிட்ட இருக்கு. ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு!' என மிரட்டிய பிரபின் கிறிஸ்டல்ராஜ், 15-க்கும் மேற்பட்டோருடன் சிறுமியை உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியிருக்கிறார்.
அப்படிப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ஹோட்டல் அறையில் சிறுமியை அடைத்துவைத்திருந்தபோதுதான், இந்த விவகாரம் போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தை நல அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தாய் நித்தியாவின் துணையோடு ரமீஜா பானுவும், பிரபின் கிறிஸ்டல்ராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அதையடுத்து மூவர் மீதும் போக்சோ, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, மூவரையும் சிறையில் அடைத்தனர்.
மேலும், 15 வயதிலேயே சிறுமிக்குத் திருமணம் செய்து கொடுத்ததற்காக சிறுமியின் தாயார் நித்தியா, கணவர் பாலமுருகன், பாலமுருகனின் தாய், தந்தை என நான்கு பேர்மீது குழந்தைத் திருமணம் செய்ததற்கான வழக்குகளைப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.