சென்னை புதுவண்ணாரப்பேட்டை, சிவகாமி நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (37). இவரின் மனைவி கோமதி. இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 15 ஆண்டுகளாகின்றன. ஆனால், குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், 21.3.2023-ம் தேதி பிரேம்குமார் வீட்டுக்கு வந்தபோது கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த பிரேம்குமார், மனைவி கோமதியின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். இதில் கோமதிக்குக் கன்னத்தில் வீக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார்.
இது குறித்து கோமதியின் அம்மா அம்சா என்பவர் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில், ``என்னுடைய கணவர் அங்கமுத்து 1998-ம் ஆண்டு இறந்துவிட்டார். எனக்கு மொத்தம் ஏழு பிள்ளைகள். என்னுடைய 5-வது மகள் கோமதி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமாரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். என்னுடைய மருமகன் பிரேம்குமார், ஏஜென்ஸி ஒன்றில் டிரைவராக இருக்கிறார். என்னுடைய மகளுக்குக் குழந்தை இல்லை. என் மகளுக்குச் சில ஆண்டுகளாக கிட்னி பிரச்னை, இதயநோய் பிரச்னை இருந்துவந்தது. அதற்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய மகள் கோமதிக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. அதனால் இடது பக்க மார்பகம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அகற்றப்பட்டது. தொடர்ந்து புற்று நோய்க்கு மாத்திரைகளைச் சாப்பிட்டுவந்தார். குழந்தை இல்லாததால் என்னுடைய மருமகன் பிரேம்குமார் மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி என் மகளுடன் சண்டைபோடுவார். சில நேரம் அடித்துவிடுவார். நான் சத்தம் போட்டுவிட்டு வருவேன். 21.3.23-ம் தேதி காலை 11:30 மணியளவில் என் மருமகன் பிரேம்குமார் மது அருந்திவிட்டு கோமதியிடம் தகராறில் ஈடுபடுவதாக எனக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

அதனால் நான் என்னுடைய மகளின் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அப்போது என்னுடைய மருமகன், கோமதியிடம், ` நீ இருப்பதால்தான் எனக்குப் பிரச்னை. குழந்தையும் இல்லை' என்று கூறி கையால் கன்னத்தில் அடித்தார். இதில் நிலைதடுமாறிய கோமதி, சுவரில் மோதிக் கீழே விழுந்தார். நான் சென்று மருமகனைச் சத்தம் போட்டேன். அதனால் பிரேம்குமார் வெளியில் சென்றுவிட்டார். அதன் பிறகு என்னுடைய மகள் `மயக்கம் வருகிறது' என்று கூறியதால், அவளை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அப்போது அங்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் நடந்த சம்பவத்தைக் கூறினேன். உடனே போலீஸார் பிரேம்குமாரை அழைத்து விசாரித்தார்கள். அவர்மீது வழக்கு பதிவுசெய்வதாகக் கூறினர். அதற்கு நான், `இது கணவன், மனைவி பிரச்னை. நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம்’ என்று எழுத்து மூலம் தெரிவித்தேன். இந்தச் சமயத்தில் கோமதிக்கு தலையில் ரத்தம் உறைந்திருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறினர். அதனால் கடந்த 22-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த கோமதி, கடந்த 26-ம் தேதி உயிரிழந்துவிட்டார். என்னுடைய மகள் கோமதியைக் கையால் அடித்த பிரேம்குமார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் கொலை வழக்கு பதிவுசெய்து, டிரைவர் பிரேம்குமாரைக் கைதுசெய்தார். விசாரணைக்குப் பிறகு பிரேம்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.