Published:Updated:

பூட்டை உடைக்காமல் தொடர்ச்சியாகத் திருட்டு; மறைந்திருந்து திருடனைப் பிடித்த நபர்! - என்ன நடந்தது?

கைது
News
கைது

பூட்டை உடைக்காமல் பக்கத்து வீட்டில் திருடிய இளநீர் வியாபாரி கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:

பூட்டை உடைக்காமல் தொடர்ச்சியாகத் திருட்டு; மறைந்திருந்து திருடனைப் பிடித்த நபர்! - என்ன நடந்தது?

பூட்டை உடைக்காமல் பக்கத்து வீட்டில் திருடிய இளநீர் வியாபாரி கைதுசெய்யப்பட்டார்.

கைது
News
கைது

சென்னை, வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம், அன்னை சத்யா நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் நல்லசிவம் (30). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டுக்குள் வைத்திருந்த 5,000 ரூபாய் திருட்டுப்போயிருந்தது. ஆனால், வீட்டின் பூட்டு உடைக்கப்படவில்லை. அதனால் நல்லசிவம், அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், காவல் நிலையத்தில் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. இதையடுத்து, நல்லசிவம், அவரின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் சென்றுவரும் நேரங்களிலெல்லாம் பணம் திருட்டுப்போனது. இவ்வாறு மூன்று முறை நல்லசிவம் வீட்டிலிருந்து பூட்டு உடைக்கப்படாமல் 20,000 ரூபாய்வரை திருட்டுப் போயிருந்தது. அதனால் பூட்டை உடைக்காமல் பணத்தைத் திருடுவது யார் என்பதைக் கண்டுபிடிக்க நல்லசிவம், அவரின் குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.

 பூட்டு
பூட்டு

இதையடுத்து, நல்லசிவமும், அவரின் மனைவியும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டனர். அதன்படி சம்பவத்தன்று நல்லசிவம் வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டார். அவரின் மனைவி, வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார். நல்லசிவம் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்த திருடன், வழக்கம்போல தன்னுடைய டெக்னிக்கில் பூட்டை உடைக்காமல் கதவைத் திறந்து உள்ளே சென்றான். பின்னர் பணத்தைத் தேடினான். அப்போது வீட்டுக்குள் இருந்த நல்லசிவம், திருடனை மடக்கிப்பிடித்து சத்தம் போட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்தனர்.

அப்போதுதான் நல்லசிவம் வீட்டில் திருட வந்தது, அவரின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் மணிகண்டன் என்று தெரியவந்தது. `இவ்வளவு நாளாக நீதான் என் வீட்டில் பூட்டை உடைக்காமல் திருடினாயா?' என்று ஆவேசமடைந்த நல்லசிவம், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டனை சரமாரியாகத் தாக்கினர். பின்னர் மணிகண்டனைப் பிடித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் , வழக்கு பதிவுசெய்து மணிகண்டனிடம் விசாரித்தார். அப்போது மணிகண்டன், இளநீர் வியாபாரம் செய்துவருவது தெரியவந்தது. இளநீர் வியாபாரத்தில் போதிய அளவு வருமானம் கிடைக்காததால் திருடிவந்ததும் தெரியவந்தது.

மணிகண்டன்
மணிகண்டன்

மணிகண்டனிடம், `பூட்டை உடைக்காமல் எப்படித் திருடினாய்' என்று போலீஸார் விசாரித்ததற்கு, `நல்லசிவம் வீட்டின் பூட்டை பிடித்து இழுத்தால் அது திறந்துவிடும். அது எனக்கு வசதியாக இருந்தது. அதனால்தான் செலவுக்குப் பணம் தேவைப்படும்போது நல்லசிவம் வீட்டில் திருடிவந்தேன்' என்று கூறியிருக்கிறார். திருடிய பணத்தை வைத்து புதிதாக மணிகண்டன் செல்போன் வாங்கியிருந்தார். இதையடுத்து, மணிகண்டனைக் கைதுசெய்த போலீஸார் அவரிடமிருந்து பணம், செல்போனை பறிமுதல்செய்தனர்.