சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (38) (பெயர் மாற்றம்). இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். இந்த நிலையில், கவிதாவுக்கும் திருவொற்றியூரைச் சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது யுவராஜ், கவிதாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். அதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகிவந்திருக்கின்றனர்.

இந்தச் சூழலில் யுவராஜிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கவிதா கூறியிருக்கிறார். அதற்கு யுவராஜ், திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். அதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது கவிதாவை யுவராஜ் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து கவிதா, திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் யுவராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து, யுவராஜைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ``கவிதா அளித்த புகாரின் அடிப்படையில் யுவராஜிடம் விசாரித்தோம். அப்போது யுவராஜும் கவிதாவும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசித்துவந்தது தெரியவந்தது. தற்போது கவிதாவைத் திருமணம் செய்துகொள்ள யுவராஜ் விரும்பவில்லை. அதனால்தான் யுவராஜைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.