கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியைச் சேர்ந்த பாலகுமார் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இவரின் வீடு இருக்கும் அதே தெருவில், 10-வது படிக்கும் சிறுமியான சௌமியாவும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) வசித்துவருகிறார். நேற்று முன்தினம் சௌமியாவின் வீட்டுக்குச் சென்ற பாலகுமாரிடம், `பத்தாம் வகுப்புக்குப் பிறகு ப்ளஸ் ஒன்னில் என்ன குரூப் எடுக்கலாம் அண்ணா' என்று கேட்டிருக்கிறார் சௌமியா. அதற்கு `உன்னுடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வா, அங்கு பேசலாம்' என்று கூறியிருக்கிரார் பாலகுமார். ஒரே தெருவில் வசிப்பதாலும், ஏற்கெனவே அறிமுகமான அண்ணன் என்பதாலும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு பாலகுமாரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சௌமியா.

அப்போது வீட்டில் தனியாக இருந்த பாலகுமார் சௌமியாவை அங்கிருந்த அறையில் தள்ளி, அவரின் துப்பட்டாவாலேயே அவரைக் கட்டிப் போட்டிருக்கிறார். அதையடுத்து கூச்சலிட முயன்ற சிறுமி சௌமியாவின் வாயைப் பொத்தி, அவரைத் தாக்கியதுடன் பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கிறார். அதையடுத்து பாலகுமார் சௌமியாவை அவிழ்த்துவிட்டதும், வீட்டுக்கு ஓடிச் சென்று தன்னுடைய பாட்டியிடம் நடந்தவற்றை தெரிவித்திருக்கிறார். உடனே சௌமியாவை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்திய சேத்தியாதோப்பு அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரின் புகாரின் அடிப்படையில் பாலகுமார் மீது போக்சோ வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர்.