Published:Updated:

சென்னை: படித்தது பொறியியல்; செய்தது மருத்துவம் - போலி மருத்துவர் சிக்கியது எப்படி?!

போலி மருத்துவர் கைது
News
போலி மருத்துவர் கைது

சென்னையில், பொறியியல்படித்துவிட்டு கடந்த எட்டு வருடமாக டாக்டராக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:

சென்னை: படித்தது பொறியியல்; செய்தது மருத்துவம் - போலி மருத்துவர் சிக்கியது எப்படி?!

சென்னையில், பொறியியல்படித்துவிட்டு கடந்த எட்டு வருடமாக டாக்டராக மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

போலி மருத்துவர் கைது
News
போலி மருத்துவர் கைது

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பியன் என்பவர் தமிழ்நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு டெல்லியிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் இணையதளத்தில் தனது மேற்படிப்பு சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய முயற்சி செய்திருக்கிறார். பலமுறை முயற்சி செய்தும் பதிவேற்றம் செய்யமுடியவில்லை. அதேபோல, தனது மருத்துவர் உரிமத்தைப் புதுப்பிக்கவும் முடியவில்லை.

தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்
தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில்

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் மருத்துவர் செம்பியன் சென்னை அரும்பாக்கத்திலுள்ள தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கு நேராகச் சென்று, பிரச்னையைச் சொல்லி விசாரணை செய்திருக்கிறார். அப்போது தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் அதிகாரிகள், மருத்துவரின் ஆவணங்களைச் சரிபார்த்தபோது, மருத்துவரின் உரிமத்தை அதேபெயரில் வேறு ஒருவர் புதுப்பித்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர், இந்தச் சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், மருத்துவரின் அதே பெயரைக் கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செம்பியன் என்பவர் உண்மையான மருத்துவரின் சான்றிதழை வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்திருக்கிறது.

போலி மருத்துவர் செம்பியன்
போலி மருத்துவர் செம்பியன்

செம்பியனுக்கு சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. இருந்தபோதிலும் அவர் ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் படித்திருக்கிறார். தனது படிப்பை முடிந்த செம்பியன் எப்படியாவது மருத்துவர் ஆகிவிட வேண்டும் என்று பல்வேறு குறுக்குவழியில் யோசித்திருக்கிறார். அதன்படி, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மருத்துவர்கள் பட்டியலில் தனது பெயரைக் கொண்ட உண்மையான மருத்துவர் செம்பியனின் மருத்துவ சான்றிதழை எடுத்து அதில், இவரின் புகைப்படம், முகவரியை மாற்றி மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, கடந்த சில வருடங்களாகச் சென்னை தரமணி பகுதியில் மருந்தகத்துடன் கூடிய ஒரு மருத்துவமனையையும் நடத்திவந்திருக்கிறார். இத்தனை வருடங்களாக அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இணையதளம் மூலம் படித்து மாத்திரை, மருந்து கொடுத்து தொடர்ந்து மருத்துவம் செய்துவந்திருக்கிறார். அதோடு, இந்தப் போலி மருத்துவர் மருத்துவம் தொடர்பான பல்வேறு கருத்தரங்கங்களிலும் பங்கெடுத்துப் பேசியிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

கைது
கைது

மேலும் இவர், கொரோனா காலகட்டத்திலும் பலருக்கும் சிகிச்சையும் வழங்கியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, சான்றிதழில் மோசடி செய்த போலி மருத்துவர்மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறது காவல்துறை. மேலும், போலி மருத்துவரின் இந்த மோசடி செயலுக்கு வேறு யாரும் உதவினார்களா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை செய்துவருகின்றனர். இன்ஜினீயரிங் படித்த ஒருவர் பல ஆண்டுகள் போலி மருத்துவராக இருந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.