Published:Updated:

`நீங்கள்தான் அந்த அதிர்ஷ்டசாலி' - சென்னை மாணவியிடம் ரூ.36,000 ஏமாற்றிய வடமாநில இளைஞர்கள்

மோசடி வழக்கில் கைதான கௌசிக்
News
மோசடி வழக்கில் கைதான கௌசிக்

மாணவியிடம் லேப்டாப், அழகுசாதனப் பொருள்கள் அனுப்புவதாகக் கூறி பணத்தை வாங்கி மோசடி செய்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:

`நீங்கள்தான் அந்த அதிர்ஷ்டசாலி' - சென்னை மாணவியிடம் ரூ.36,000 ஏமாற்றிய வடமாநில இளைஞர்கள்

மாணவியிடம் லேப்டாப், அழகுசாதனப் பொருள்கள் அனுப்புவதாகக் கூறி பணத்தை வாங்கி மோசடி செய்த வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

மோசடி வழக்கில் கைதான கௌசிக்
News
மோசடி வழக்கில் கைதான கௌசிக்

சென்னை, பெரவள்ளூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் ப்ளஸ் டூ படித்துவருகிறார். கடந்த 20.12.2022-ம் தேதி அந்த மாணவியின் செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், தான் தனியார் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் அந்த நபர், தங்கள் நிறுவனம் குலுக்கல் முறையில் ஐந்து பேரைத் தேர்வுசெய்து அவர்களுக்கு கிஃப்ட்டுகளைக் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார். மேலும், `அதில் ஓர் அதிர்ஷ்டசாலியாக நீங்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறீர்கள்' என்று கூறியிருக்கிறார். அதைக் கேட்ட மாணவி சந்தோஷமடைந்திருக்கிறார்.

ஆன்லைன் விற்பனை மோசடி
ஆன்லைன் விற்பனை மோசடி
vikatan

இதையடுத்து தொடர்ந்து பேசிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவன ஊழியர், `பரிசைப் பெற வேண்டுமென்றால், 5,027 ரூபாய்க்கான அழகுசாதனப்பொருள்களை வாங்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார். அதற்கு `ஓகே' என்று கூறி, மாணவியிடம், பணத்தை அனுப்புவதற்கான அக்கவுன்ட் நம்பரையும் அந்த நபர் கொடுத்திருக்கிறார். இதையடுத்து மாணவி, அந்த வங்கிக் கணக்குக்கு 5,027 ரூபாயை அனுப்பிவிட்டு, பரிசுப்பொருளாக லேப்டாப்பைத் தேர்வுசெய்திருக்கிறார். இதையடுத்து லேப்டாப்புக்கு இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டும் என்று கூறி மீண்டும் பேசிய அந்த நபர், அதற்குப் பணம் செலுத்தும்படி தெரிவித்திருக்கிறார். அதையும் நம்பிய மாணவி, இரண்டு தவணைகளாக 30,980 ரூபாயைச் செலுத்தியிருக்கிறார். மொத்தம் 36,097 ரூபாயை மாணவி அனுப்பிவைத்திருக்கிறார். ஆனால் அழகுசாதனப்பொருளும், லேப்டாப்பும் மாணவிக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.

அதனால் தன்னிடம் பேசிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் ஊழியரின் செல்போன் நம்பருக்கு மாணவி தொடர்புகொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் என பதில் வந்திருக்கிறது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி, விவரத்தை குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். அதன்பேரில் பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. போலீஸார், கொளத்தூர் காவல் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு விசாரணை நடத்தினர்.

மோசடி வழக்கில் கைதான பிபுல் மலக்கர்
மோசடி வழக்கில் கைதான பிபுல் மலக்கர்

விசாரணையில் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி நம்பவைத்து பண மோசடி செய்தது, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிபுல் மலக்கர் (22), கௌசிக் மண்டல் (22) எனத் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் இருவரையும் கைதுசெய்து மேற்கு வங்காளம் பராக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்தனர். இவர்கள் இருவரிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்கள் இருவரும் இதே ஸ்டைலில் பலரிடம் பண மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து வில்லிவாக்கம் உதவி கமிஷனர் ராகவேந்திர ரவி விசாரணை நடத்திவருகிறார். இவர்கள் இருவரும் யாரிடமெல்லாம் எவ்வளவு ரூபாய் மோசடி செய்திருக்கிறார்கள், அந்தப் பணத்தை எங்கு வைத்திருக்கிறார்கள் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.