சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் ஏராளமானவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் மூன்று டவர்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் பல்லாவரம் பகுதியில் விபத்தில் சிக்கியதாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். இதையடுத்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்திலிருந்து மூதாட்டி மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையில் உயிரிழந்த மூதாட்டியின் பெயர் லூசியா என்றும், சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மூதாட்டி மரணம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தியபோது, அப்படியொரு விபத்து நடக்கவில்லை என்று தெரியவந்தது. அப்படியென்றால் மூதாட்டி லூசியா எப்படி இறந்தார் என்ற கேள்வி எழுந்தது. அது தொடர்பாக மருத்துவமனை வளாக போலீஸார் விசாரணை நடத்த தொடங்கினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து மருத்துவமனை வளாக காவல் நிலைய போலீஸார் கூறுகையில், ``உயிரிழந்த மூதாட்டி லூசியாவை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எப்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரத்தை விசாரித்தோம். அப்போது, அங்கு பணியாற்றும் பயிற்சி டாக்டர் பிரபாகரன் என்பவர் குறித்த தகவல் தெரியவந்தது. ஆனால் லூசியா சிகிச்சை ரிப்போர்ட்டில் விபத்து நடந்த இடம் பல்லாவரம் எனக் குறிப்பிடப்பட்டிருந்து, இது எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதனால், மருத்துவமனையில் மூதாட்டி லூசியா எப்படி அனுமதிக்கப்பட்டார் என்ற விவரத்தைக் கண்டறிய சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தோம். அப்போது கடந்த 8-ம் தேதி மருத்துவமனையின் டவர் மூன்றில் உள்ள மருத்துவர்களுக்கான கார் பார்க்கிங் பகுதியில் லூசியா படுத்து உறங்கியுள்ளார். அப்போது காரை எடுக்க வந்த டாக்டர் பிரபாகரன், கவனிக்காமல் அவர்மீது காரை ஏற்றியுள்ளார். இதில் மூதாட்டி லூசியாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தகவல் மறைக்கப்பட்டு, பல்லாவரம் பகுதியில் விபத்து நடந்தது போல ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பயிற்சி டாக்டர் பிரபாகரனிடம் விசாரித்தபோது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கார் பார்க்கிங்கில் விபத்து நடந்த தகவலை ஒப்புக்கொண்டார். அதனால் அவரைக் கைதுசெய்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டுதல், கொலையாகாத மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.