ஈரோடு மாவட்டம், பெருந்துறை கருமாண்டிசெல்லிபாளையம், சிதம்பரனார் வீதியைச் சேர்ந்தவர் ரவி (54). இவருடைய தாத்தா காலமானதால், அது தொடர்பான வாரிசுச் சான்று வழங்கக் கேட்டு பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ) இருக்கும் அன்பரசனிடம் மனு கொடுத்தார். அப்போது வாரிசுச் சான்றிதழ் வழங்க வேண்டுமானால் தாசில்தாருக்கும், தனக்கும் சேர்த்து லஞ்சமாக ரூ.25,000 வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதனால் தாசில்தார் சிவசங்கரை அணுகிய ரவி, அவரிடம் விண்ணப்பத்தை வழங்கினார். விண்ணப்பத்தைப் பெற்ற தாசில்தார் சிவசங்கர், இது குறித்து விசாரித்து வாரிசுச் சான்று அளிக்கப் பரிந்துரை செய்கிறேன் எனக் கூறி அவரை அனுப்பிவிட்டார். அவரிடம் தாசில்தார் பணம் எதுவும் கேட்கவில்லை. இதையடுத்து, மீண்டும் வருவாய் ஆய்வாளர் அன்பரசனைச் சந்தித்து சான்றிதழ் குறித்து பேசியிருக்கிறார் ரவி.

அப்போது, தனது பங்குத்தொகையாக ரூ.8,000 மட்டும் கொடுத்தால் சான்றிதழ் வழங்கப் பரிந்துரைப்பதாக அன்பரசன் கூறியதாகத் தெரிகிறது. லஞ்சம் அளிக்க விரும்பாத ரவி, ஈரோடு லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு தடுப்பு டி.எஸ்.பி ராஜேஷிடம் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட டி.எஸ்.பி ராஜேஷ் தலைமையிலான போலீஸார், ரசாயனம் தடவிய 8,000 ரூபாய் நோட்டுகளை ரவியிடம் கொடுத்தனுப்பினர்.
இந்தப் பணத்தை எடுத்துச் சென்று பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் ஆர்.ஐ அன்பரசனைச் சந்தித்தபோது, அருகிலுள்ள அறையிலுள்ள தன்னுடைய உதவியாளர் அலெக்ஸாண்டரிடம் கொடுக்குமாறு கூறியிருக்கிறார். அதன்படி அலெக்ஸாண்டரிடம் லஞ்சப் பணத்தை கொடுக்கும்போது மறைந்திருந்த போலீஸார் அலெக்ஸாண்டரை மடக்கிப் பிடித்தனர். அலெக்ஸாண்டரிடம் போலீஸார் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது. தனது உயரதிகாரியான ஆர்.ஐ அன்பரசன் கூறியதால்தான் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறினார். இதையடுத்து, அன்பரசனை போலீஸார் கைதுசெய்தனர். அதன் பிறகு அலுவலகத்திலும், அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். இது குறித்து டி.எஸ்.பி ராஜேஷிடம் பேசினோம். "வாரிசுச் சான்றிதழ் வழங்கக் கேட்டு தாசில்தாரை, ரவி அணுகியபோது, விசாரித்து சான்று தருவதாக மட்டுமே தாசில்தார் கூறியிருக்கிறார். பணம் எதுவும் அவர் கேட்கவில்லை. அன்பரசன்தான் பணியை முடித்து தருவதாகக் கூறி ரூ.8,000 பணத்தை லஞ்சமாகக் கேட்டிருக்கிறார். அவரது வீடு, அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் சிக்கவில்லை. தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.
அவரை தற்காலிகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யுமாறு தாசில்தாருக்கு பரிந்துரை செய்யப்படும்" என்றார்.