கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகிலிருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான 27 வயது இளம்பெண், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அந்தப் பகுதியிலுள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்துவருகிறார்.
நேற்று முன்தினம் மாலை பணி முடித்துவிட்டு, தன் ஆண் நண்பருடன் பைக்கில் விடுதிக்குத் திரும்பியிருக்கிறார். வெம்பாக்கம் அருகேயுள்ள சித்தாத்தூர் கிராமம் வழியாக நமண்டி ஏரிக்கரைப் பகுதியில் சென்றபோது, மூன்று இளைஞர்கள் பைக்கை மறித்திருக்கிறார்கள். இதையடுத்து, இளம்பெண்ணின் ஆண் நண்பரைத் தாக்கி, கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு, அந்தப் பெண்ணிடம் அத்துமீறியிருக்கிறார்கள்.

அப்போது இளைஞர்களிடமிருந்து தப்பி ஓடிய இளம்பெண், ஆள் நடமாட்டமிருந்த பகுதிக்குள் நுழைந்ததால், ஊர்மக்கள் திரண்டு இளைஞர்களை விரட்டியடித்தனர். ஏரிக்கரைப் பகுதியில் கட்டிப்போடப்பட்டிருந்த இளம்பெண்ணின் ஆண் நண்பனையும் மீட்டு, தூசி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தியதில் திருடிராயபுரம் கிராமத்தைச்சேர்ந்த 28 வயதான சந்திரசேகர், 27 வயதான ரஞ்சித்குமார், 21 வயதான விக்னேஷ் ஆகிய மூவரும்தான் இளம்பெண்ணிடம் அத்துமீறியவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து, தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மூன்று இளைஞர்களையும் போலீஸார் கைதுசெய்து, விசாரணை நடத்திவருகிறார்கள்.