ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள ஈஞ்சரமேடு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 27-ம் தேதி, அதே பகுதியிலுள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது, அந்தச் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வாசுதேவன், சிவகுமார், மோகன் ஆகியோர் வழிமறித்து, கடத்திச் சென்று சிவகுமார் வீட்டில்வைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதோடு, சிறுமியிடம் இது குறித்து வெளியே கூறினால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கின்றனர். இதனால் சிறுமி பயத்தில் உறைந்திருக்கிறார். அடுத்த நாளும் சிறுமியை மிரட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

சிறுமி இரண்டு நாள்களாகச் சோர்வடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட அவரின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்திருக்கின்றனர். அப்போது, வாசுதேவன், சிவகுமார், மோகன் ஆகியோர் அந்தச் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீட்டின் அருகே வசித்துவரும், சிறுமியின் பெரியப்பாவான பச்சையப்பன் என்கிற குணசேகரனும் கடந்த மூன்று மாதமாக சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெரியப்பா குணசேகரன், வாசுதேவன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்த போலீஸார், இருவரையும் ஈரோட்டிலுள்ள மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் சிவகுமார், மோகன் ஆகிய இருவரையும் தேடிவருகின்றனர்.