திருச்சி மாவட்டம், தென்னூர், காஜா தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஹல்பான். இவர் கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி கொடுத்தப் புகாரில், ``நான், மேற்கண்ட முகவரியில் என்னுடைய அண்ணனின் நண்பரான முகமது அஸ்வர் என்பவரின் வீட்டில் தங்கியிருக்கிறேன். முகமது அஸ்வர், திருச்சி அண்ணாநகர் பகுதியில் துணிக்கடை, ஃபேன்ஸி ஸ்டோர் நடத்திவருகிறார். அந்தக் கடையில் நான் வேலை பார்த்துவருகிறேன்.

இந்த மாதம் 5-ம் தேதி என்னுடைய முதலாளி முகமது அஸ்வர், என்னிடம் `அவசரமாக இன்று இரவு சென்னைக்கு செல்போன்களை எடுத்துச் செல்ல வேண்டும்' என்று கூறினார். செல்போன்களை சென்னை, திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட்டிலுள்ள அவரின் உறவினரான ஆசிக் அலியிடம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி நானும் திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து, முதலாளி முகமது அஸ்வர் கொடுத்த கட்டைப்பையை எடுத்துக்கொண்டு சென்னைக்கு 6-ம் தேதி வந்தேன்.
வாடகை பைக் மூலம் திருவல்லிக்கேணிக்குச் செல்ல முன்பதிவு செய்துவிட்டு பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது, அங்கு வந்த இரண்டு நபர்கள், என்னுடைய தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டு, `நாங்கள் போலீஸ்' என்று கூறினர். பின்னர் அவர்கள் என்னை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, நான் கையில் வைத்திருந்த பையை வாங்கிக்கொண்டனர். அடுத்து சில நிமிடங்களில் என்னுடைய செல்போனை வாங்கிக்கொண்ட அவர்கள், அருகில் இருந்த வெள்ளை நிற கால்டாக்ஸியில் என்னை ஏறச் சொன்னார்கள். நான் போலீஸ் என நம்பி அந்த காரின் பின் இருக்கையில் அமர்ந்தேன். அதன் பிறகு அங்கிருந்து கார் புறப்பட்டது.

அப்போது என்னை காரில் ஏற்றிய இரண்டு நபர்கள், `நீ திருட்டு பொருள்களை வைத்திருக்கிறாய்... எஃப்.ஐ.ஆர் போட்டால் ஜெயிலுக்குச் சென்றுவிடுவாய்' என என்னை மிரட்டி, 20 ஐ-போன்கள், விலைமதிப்புள்ள பொருள்கள் அடங்கிய கட்டைப்பையைப் பறித்துக்கொண்டனர். மேலும், விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி என்னுடைய பர்சையும் அவர்கள் என்னிடமிருந்து எடுத்துக்கொண்டனர். வண்டலூர் அருகே காரை நிறுத்திய அவர்கள், `பர்சையும் செல்போனையும் என்னிடம் கொடுத்துவிட்டு திருச்சிக்குச் சென்றுவிடு’ என்று கூறி தப்பிச் சென்றுவிட்டனர். அதன் பிறகு நான் நடந்த சம்பவத்தை முதலாளி முகமது அஸ்வரிடம் போனில் தெரிவித்தேன். அவர் கூறியதன் பேரில் காவல் நிலையத்தில் புகாரளிக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.
முகமது ஹல்பான் கொடுத்த தகவலின்படி, போலீஸார் பேருந்து நிலைய பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். காரின் பதிவு நம்பரைக்கொண்டு போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், முகமது ஹல்பானிடம் போலீஸ் எனக் கூறி நடித்தது திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்த வசந்தகுமார், சர்புதீன் ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைதுசெய்து 20 ஆப்பிள் ஐ-போன்கள், தங்க முலாம் பூசப்பட்ட 9 செயின்கள், ஒரு கார் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கோயம்பேடு போலீஸார் நம்மிடம் பேசுகையில், ``புகாரில் 20 ஐ-போன்கள், விலை உயர்ந்த பொருள்கள் என்றே முகமது ஹல்பான் குறிப்பிட்டிருந்தார். அவரிடம் விசாரித்தபோது விலை உயர்ந்த பொருள்கள் எனத் தங்க முலாம் பூசப்பட்ட ஒன்பது செயின்கள் எனக் கூறினார். அதனடிப்படையில் விசாரித்தபோதுதான், முதலாளி முகமது அஸ்வர், வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு ஐபோன்கள், நகைகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பது தெரியவந்தது. அதற்கு எந்தவித கணக்கும் இல்லை. எனவே, இந்தப் பொருள்களைக் கொள்ளையடித்தால் காவல் நிலையத்துக்குச் செல்ல மாட்டார்கள் எனக் கருதியே சர்புதீனும், வசந்தகுமாரும் போலீஸ் எனக் கூறி குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பவத்தன்று முகமது ஹல்பான், திருச்சியிலிருந்து சென்னைக்குப் பொருள்களைக் கொண்டுசெல்லும் தகவல் சர்புதீனுக்குத் தெரியவந்ததும், அவரைப் பின்தொடர்ந்து வந்து கைவரிசை காட்டியிருக்கிறார். முகமது அஸ்வரிடம் ஏற்கெனவே சர்புதீன் வேலை பார்த்தவர் என்பதால், அவர் குறித்த அனைத்துத் தகவல்களும் அவருக்குத் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம். தற்போது செல்போன்கள், நகைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். அவற்றின் மதிப்பை கணக்கிட்டு வருகிறோம்" என்றனர்.