Published:Updated:

`ஹை-எண்ட் பைக்குகளே டார்கெட்!' - இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் திருட்டு... போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

மீட்கப்பட்ட பைக்குகள்
News
மீட்கப்பட்ட பைக்குகள்

இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட விலை உயர்ந்த பைக்குகளைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

Published:Updated:

`ஹை-எண்ட் பைக்குகளே டார்கெட்!' - இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் திருட்டு... போலீஸில் சிக்கிய இளைஞர்கள்!

இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட விலை உயர்ந்த பைக்குகளைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

மீட்கப்பட்ட பைக்குகள்
News
மீட்கப்பட்ட பைக்குகள்

சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 29.4.2022-ம் தேதி இரவு வீட்டின் முன்பு தன்னுடைய பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர் மறுநாள் (30.4.2022) பைக் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சீனிவாசன், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை முழுவதும் விலை உயர்ந்த பைக்குகளை மட்டும் ஒரு கும்பல் தொடர்ந்து திருடுவது தெரியவந்தது.

கைதானவர்களுடன் போலீஸ்
கைதானவர்களுடன் போலீஸ்

இதையடுத்து, கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி மேற்பார்வையில் உதவி கமிஷனர் துரை, இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமைக் காவலர்கள் சரவணக்குமார், பிரதீப், காவலர் திருக்குமரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீஸார் பைக் திருட்டு வழக்கை விசாரித்தனர். விசாரணையில் பைக் திருட்டில் ஈடுபட்டது ஓட்டேரி, பிரிக்ளின் ரோடு பகுதியைச் சேர்ந்த விக்கி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) (18), சென்னை சூளை, வி.வி.கோயில் தெருவைச் சேர்ந்த சோமேஷ் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீஸார் கைதுசெய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து எட்டு விலை உயர்ந்த பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான சோமேஷ், விக்கி ஆகியோர் தனிப்படை போலீஸாரிடம் அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாரிடம் பேசினோம். ``கைதுசெய்யப்பட்ட விக்கி, ஒரு பைக் ரேஸர். மேலும், இவர் பைக்கில் சாகசத்தில் ஈடுபட்டு அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸாகப் பதிவுசெய்து வந்திருக்கிறார். மேலும், அந்த வீடியோவைத் தன்னுடைய தோழி ஒருவருக்கு அனுப்பி பந்தா காட்டியும் வந்திருக்கிறார் விக்கி. ஆனால், விக்கிக்கு விலை உயர்ந்த பைக்குகளை வாங்கப் பணமில்லை. அதனால்தான் விலை உயர்ந்த பைக்குகளைத் திருடி வந்திருக்கிறார். விக்கியும் அவரின் நண்பர்களும் விலை உயர்ந்த பைக்குகளில் வாரந்தோறும் சென்னை புறநகர்ப் பகுதியிலுள்ள அவுட்டர் ரிங் ரோடு பகுதிக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள். அப்போது, விக்கியும் சோமேஷும் புது, புது பைக்குகளில் அங்கு வந்து கெத்து காட்டியிருக்கிறார்கள்.

ஒற்றைச் சக்கரத்தில் பைக்கை நீண்ட தூரம் ஓட்டுவதில் விக்கி ஸ்பெஷலிஸ்ட். அப்படி அவர் ஒற்றைச் சக்கரத்தில் பைக்கை ஓட்டிச் செல்லும் வீடியோவுக்கு இன்ஸ்டாவில் அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும், புதுப்புது பைக்குகளில் விக்கி போடும் பைக் சாகச வீடியோக்களைத் தனிப்படை போலீஸார் ஆய்வுசெய்தபோது, அந்த பைக்குகள் திருடப்பட்டவை என்ற விவரம் தெரியவந்தது. விக்கியும், சோமேஷும் விலை உயர்ந்த பைக்குகளைத் திருடி அவற்றை வைத்து சாகச வீடியோ எடுத்துவிட்டு, தங்களின் நண்பர்களிடம் கொடுத்து வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரிடம் விசாரித்தபோது 20-க்கும் மேற்பட்ட பைக்குகளைத் திருடியது தெரியவந்தது. அதில் ஏற்கெனவே நான்கு பைக்குகள் மீட்கப்பட்டிருக்கின்றன. தற்போது நாங்கள் எட்டு பைக்குகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். மீதமுள்ள பைக்குகளை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்" என்றனர்.

இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``கைதுசெய்யப்பட்ட விக்கி, உருப்படியாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறான். இவன்மீது ஏற்கெனவே கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு இருக்கிறது. மேலும், விக்கி குடியிருக்கும் பகுதியிலுள்ள சாலையின் பெயரிலே இன்ஸ்டாவில் ஐடியை உருவாக்கி அதில் ஏராளமான பைக் சாகச வீடியோக்களைப் பதிவுசெய்திருக்கிறான். விக்கி, கைதுசெய்யப்பட்டதும் அந்த ஐடி-யை அவனின் தோழி பிளாக் செய்திருக்கிறார். அந்த ஐடி-யை ஓப்பன் செய்து பார்த்தால் விக்கி திருடிய பைக்குகளின் விவரங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

சோமேஷ்
சோமேஷ்

அதே நேரத்தில் விக்கியும் சோமேஷும் சேர்ந்து ஓட்டேரி, அயனாவரம், டி.பி.சத்திரம், சிந்தாதிரிப்பேட்டை, நீலாங்கரை, திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் விலை உயர்ந்த பைக்குகளைத் திருடியது தெரியவந்திருக்கிறது. அது தொடர்பாக அந்தந்த காவல் நிலையங்களில் பைக் திருட்டு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம். சோமேஷ், தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். மேலும், இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் கூட்டமும் இருந்திருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.