திருப்பூரைச் சேர்ந்தவர் பிரபுதரன். பின்னலாடை ஏற்றுமதியாளரான இவர், 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவக் கவச உடைகளை சர்வதேச தரச்சான்றுடன் கொடுப்பதற்கு ஆர்டர் எடுத்திருக்கிறார். பின்னர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பனியன் வர்த்தகரான சினேகாஷிஸ் முகர்ஜி என்பவரிடம் அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து தர ஆர்டர் கொடுத்திருக்கிறார்.

சினேகாஷிஸ் முகர்ஜியும் பிரபுதரன் கேட்ட ஆடைகளை அனுப்பிவைத்தார். 2019 முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் இதற்காக ரூ.4.1 கோடியை பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். இந்த நிலையில், அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகள் உரிய தரத்தில் இல்லை என்றும், அவை போலியான சான்றிதழ் மூலம் தயாரித்து அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்தினர் பிரபுதரனுக்கு ஆடைகளைத் திருப்பி அனுப்பிவிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜியை தொடர்புகொண்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அதன் பிறகே போலிச் சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பிவைத்து மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து பிரபுதரன் திருப்பூர் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் 2022-ம் ஆண்டு புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, சினோஷிஸ் முகர்ஜி, அவர் மனைவி, தந்தை உட்பட நான்கு பேர்மீது மோசடி வழக்கு பதிவுசெய்து தேடிவந்தனர்.

இந்த நிலையில், மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தாவுக்குச் சென்று முகாமிட்டு, மோசடி சம்பவம் தொடர்பாக சினேகாஷிஸ் முகர்ஜியைக் கைதுசெய்தனர். பின்னர், போலீஸார் அவரை திருப்பூருக்கு அழைத்துவந்து விசாரித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று திருப்பூர் மாவட்டச் சிறையிலடைத்தனர்.