சென்னை பெருங்குடி, முதல் மெயின் ரோடு, ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜெயகணேஷ். இவரின் மனைவி முருகேஷ்வரி, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வருகிறேன். என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, கஸ்தூரி ரங்காபுரம். நான், பி.ஏ படித்து, டீச்சர் ட்ரெயினிங் படித்திருக்கிறேன். கடந்த 1.2.2017-ம் தேதி எனக்கும் சங்கரன்கோவிலைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் சங்கரன்கோவிலில் வைத்து திருமணம் நடந்தது. எங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

என்னுடைய கணவர் ஜெய்கணேஷ், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். அவர் வழக்கறிஞர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். 25.3.23-ம் தேதி காலையில் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடச் செல்வதாகவும், இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றார். நான் அவரின் வருகைக்காக நாங்கள் குடியிருக்கும் வீட்டு கேட்டின் உள்புறம் இரவு 9 மணியளவில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது என்னுடைய கணவர் பைக்கில் வந்து இறங்கி வீட்டின் கேட்டை திறக்கும்போது, இன்னொரு பைக்கில் பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய மூன்று பேர் வந்தனர். அவர்கள் கூர்மையான ஆயுதங்களுடன் ஓடி வந்து என்னுடைய கணவரின் சட்டையைப் பின்பக்கமாக இழுத்து, `இவனை வெட்டிக் கொல்லுங்கடா' என்று ஆவேசமாகச் சத்தம் போட்டுக்கொண்டு, என் கணவரின் தலையிலும் முகத்திலும் மாறி மாறி வெட்டினார்கள்.
அதை என்னுடைய கணவர் தடுக்க முயன்றபோது, இரண்டு கைகளிலும் விரல்களிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அதைப் பார்த்த நானும் பயத்தில் கூச்சலிட்டேன். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அங்கு ஓடிவந்தனர். அதனால் மூன்று பேரும் அவர்கள் வந்த வண்டியில் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் நான் என்னுடைய கணவரின் அருகில் சென்று அவரைத் தூக்க முயன்றேன். அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். ஆனால், சொல்ல முடியாமல் வலியால் துடித்தார். பின்னர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அப்போது என்னுடைய கணவரின் வெட்டப்பட்டு தூண்டாகிப் போன கைவிரல்களையும் டாக்டரிடம் கொடுத்தேன். ஆனால் அதிகாலையில் என் கணவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே என்னுடைய கணவரைக் கொலைசெய்தவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தார். இந்த நிலையில், ஜெய்கணேஷைக் கொலைசெய்த குற்றத்துக்காக விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று மூன்று பேர் சரணடையப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதனால் விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மூன்று பேருக்கும் யாரும் மனுத்தாக்கல் செய்யக் கூடாது என வழக்கறிஞர்கள் தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. அதனால் மூன்று பேரும் விழுப்புரத்திலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்க துரைப்பாக்கம் போலீஸார் முடிவுசெய்திருக்கிறார்கள்.