சென்னை, ராயபுரம், அண்ணா பார்க் அருகே காரில் வைத்து இளைஞர்கள் போதைப்பொருள்கள் விற்பதாக ராயபுரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸார், காரிலிருந்த இரண்டு இளைஞர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து காரை சோதனை செய்தபோது போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதனால் இரண்டு இளைஞர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், காரைப் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் போதைப்பொருள்களை விற்றது சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த காசிம் (40), கடலூர் மாவட்டம், நல்லத்தூரைச் சேர்ந்த குமரவேல் (38) எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 500 கிராம் எடையுள்ள போதைப்பொருள், நான்கு செல்போன்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் காசிம், குமரவேல் ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட காசிம் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருக்கிறது. காசிம், குமரவேல் ஆகியோர் அளித்த தகவலின்படி இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகிறார்கள். கைதுசெய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், சிறையில் அடைத்தனர்.