ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாபு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி பெற்றோர்கள் ஏற்பாட்டில் திருமணம் நடந்து முடிந்திருந்தது.

இந்தத் தம்பதிக்கு நடைபெற்ற முதலிரவில், மனைவிக்குத் தெரியாமல் ரகசியமாகத் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்திருந்திருக்கிறார் வீரபாபு. பின்னர், தான் எடுத்துவைத்திருந்த தன்னுடைய முதலிரவு வீடியோவை, அனைவரும் பார்க்கும்படி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.
இதையறிந்த பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெண் வீட்டார், மணமகனிடம் தகராறு செய்திருக்கிறார்கள். இந்த விவகாரம் அந்த ஊர் பஞ்சாயத்தில் பேசி சமாதானம் செய்துவைக்கப்பட்டிருக்கிறது.

இருந்தபோதிலும், அந்தப் பெண்ணின் பெற்றோர் இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், மணமகன் வீரபாபுவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். தனது முதலிரவை வீடியோ பதிவுசெய்து ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.