தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. `கஞ்சா வேட்டை 3.0' என வெர்சன் மாறியிருந்தாலும் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தமுடியாத அளவில் நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், சென்னை அருகிலுள்ள மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியிலுள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸார் மஃப்டியில் நோட்டமிட்டனர். அப்போது, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவது உறுதியானது.
சம்பந்தப்பட்ட வீட்டுக்குள் போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அதில், அங்கு பதுக்கிவைத்திருந்த இரண்டு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த எம்.பி.ஏ படித்து முடித்த இளைஞர் ஒருவரும், பொறியியல் படித்து முடித்த மாணவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், படித்து முடித்துவிட்டுச் சரியான வேலை எதுவும் கிடைக்காத விரக்தியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. மேலும், இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கோவையைச் சேர்ந்த நபர் ஒருவரின் மூலம் சென்னைக்குக் கஞ்சா வாங்கிவந்து விற்பனை செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர்களுக்குக் கஞ்சா விற்பனை செய்தவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகிறது.